இந்தியா - இலங்கை ஒருநாள் தொடர்: டை ஆன முதல் ஆட்டம்!

67 ரன்கள் அடித்து, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய வெல்லாலகே ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்தியா - இலங்கை ஒருநாள் தொடர்: டை ஆன முதல் ஆட்டம்!
ANI
2 min read

இந்தியா - இலங்கை இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் சமனில் முடிந்துள்ளது.

இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் பங்கேற்பதற்காக இலங்கைக்குச் சென்றுள்ளது.

டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி. இந்நிலையில் முதல் ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

தொடக்க வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஒரு ரன்னில் வெளியேற பதும் நிசங்கா சிறப்பாக விளையாடினார்.

இதன் பிறகு குசால் மெண்டிஸ் 14, சமரவிக்ரமா 8, அசலங்கா 14 ரன்களில் அடுத்தடுத்து வெளியேற மறுமுனையில் பதும் நிசங்கா அரைசதம் அடித்தார்.

பதும் நிசங்கா 9 பவுண்டரிகளுடன் 75 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து வெளியேற 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இலங்கை அணி.

இந்திய அணியில் பந்துவீசிய அனைவரும் சிறப்பாகப் பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தினர். இதன் பிறகு வெல்லாலகே இலங்கை அணியை சரிவில் இருந்து மீட்டார்.

அவருடன் கூட்டணி அமைத்த லியானகே 20 ரன்கள் எடுத்த நிலையில் அக்‌ஷர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஹசரங்கா தனது பங்குக்கு 24 ரன்கள் எடுத்து அர்ஷ்தீப் சிங் பந்தில் வெளியேறினார்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும், வெல்லாலகே பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.

இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்தது. வெல்லாலகே ஆட்டமிழக்காமல் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 65 பந்துகளில் 67 ரன்கள் அடித்தார்.

இந்திய அணியில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங், அக்‌ஷர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 231 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. ரோஹித் சர்மா - கில் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்து தந்தனர்.

ஓவருக்கு 6 ரன்கள் வீதம் வந்து கொண்டிருந்தது. 75 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை வெல்லாலகே பிரித்தார்.

கில் 35 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த ரோஹித் சர்மா 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 47 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதன் பிறகு வாஷிங்டன் சுந்தர் 5 ரன்களில் வெளியேற, விராட் கோலி - ஸ்ரேயஸ் ஐயர் கூட்டணி அமைத்தனர். 43 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை ஹசரங்கா பிரித்தார்.

கோலி 24 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக ஸ்ரேயஸ் ஐயரும் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க கே.எல். ராகுல் - அக்‌ஷர் படேல் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி 57 ரன்கள் சேர்த்தது.

இந்த கூட்டணி இந்தியாவை வெற்றி பெற செய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் ஹசரங்கா மற்றும் அசலங்கா ஆகியோரின் அபாரமான பந்துவீச்சால் ஆட்டம் தலைகீழாக மாறியது.

ராகுல் 43 பந்துகளில் 31 ரன்களும், அக்‌ஷர் படேல் 57 பந்துகளில் 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன் பிறகு துபே களத்தில் இருந்த வரை இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பு இருந்தது.

வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் இந்திய அணிக்கு கைவசம் 2 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால், கேப்டன் அசலங்கா அடுத்தடுத்து இரண்டு சிறப்பானப் பந்துகளை வீசி துபே மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரை வெளியேற்ற ஆட்டம் டை ஆனது.

துபே 25 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியில் ஹசரங்கா மற்றும் அசலங்கா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வெல்லாலகே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கில் 67 ரன்கள் அடித்து, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய வெல்லாலகே ஆட்டநாயகன் விருதை வென்றார்.

2-வது ஒருநாள் ஆட்டம் ஆகஸ்ட் 4 அன்று நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in