நம்ப முடியாத வெற்றி: டி20 தொடரை முழுமையாக வென்ற இந்திய அணி!

கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட சூழலில் கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்தும் இலங்கை அணியால் இலக்கை எட்ட முடியவில்லை.
டி20 தொடரை முழுமையாக வென்ற இந்திய அணி!
டி20 தொடரை முழுமையாக வென்ற இந்திய அணி!
2 min read

இலங்கைக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

இலங்கைக்கு எதிரான மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் இரு ஆட்டங்களையும் இந்திய அணி வென்ற நிலையில், இன்று கடைசி டி20 நடைபெற்றது.

டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. ஜெயிஸ்வால் 9 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்ததாக சாம்சன் 0, ரிங்கு சிங் 1, சூர்யகுமார் யாதவ் 8, துபே 13 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க கில் மற்றும் ரியான் பராக் கூட்டணி அமைத்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இந்த ஜோடி 54 ரன்கள் சேர்த்த நிலையில் கில் 3 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்து ஹசரங்கா பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து பராக் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்து ஹசரங்காவின் அதே ஓவரில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் வாஷிங்டன் சுந்தர் ஆறுதல் அளிக்கும் வகையில் 18 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து தீக்‌ஷனா பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. தீக்‌ஷனா 3 விக்கெட்டுகளையும், ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து விளையாடிய இலங்கை அணிக்கு பதும் நிசங்கா - குசால் மெண்டிஸ் ஜோடி நல்ல கூட்டணியை அமைத்து தந்தது. இருவரும் பொறுமையாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர்.

58 ரன்கள் சேர்த்த இந்த கூட்டணியை ரவி பிஷ்னாய் பிரித்தார். நிசங்கா 27 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் பிறகு குசால் மெண்டிஸ் - குசால் பெரேரா கூட்டணி வேகமாக ரன்களை எடுத்தது.

52 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை மீண்டும் ரவி பிஷ்னாய் பிரித்தார். குசால் மெண்டிஸ் 41 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் தனது ஓவரில் ஹசரங்காவை 3 ரன்களிலும், அசலங்காவை ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேற்ற ஆட்டம் சூடுபிடித்தது.

ஒருபக்கம் குசால் பெரேரா சிறப்பாக விளையாடினார். கடைசி இரண்டு ஓவர்களில் பந்துவீச சிராஜ் மற்றும் கலீல் அஹமதுக்கு தலா ஒரு ஓவர் இருந்தாலும் கூட பகுதிநேர பந்துவீச்சாளரான ரிங்கு சிங்கிடம் பந்து கொடுக்கப்பட்டது.

டி20 கிரிக்கெட்டில் தனது முதல் ஓவரை வீசிய ரிங்கு சிங் குசால் பெரேராவின் விக்கெட்டை வீழ்த்தினார்.

குசால் பெரேரா 5 பவுண்டரிகளுடன் 34 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ரமேஷ் மெண்டிஸும் 3 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்டது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் ரன் எடுக்கப்படவில்லை.

அடுத்தப் பந்தில் கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழந்தார். 3-வது பந்தில் தீக்‌ஷனாவும் ஆட்டமிழந்தார். 3 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 5-வது பந்தில் 2 ரன்கள் எடுக்க கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்திலும் 2 ரன்கள் எடுக்க ஆட்டம் டிரா ஆனது.

கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட சூழலில் கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்தும் இலங்கை அணியால் இலக்கை எட்ட முடியவில்லை.

இதைத் தொடர்ந்து சூப்பர் ஓவரில் இலங்கை அணி 2 ரன்களை மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் பிறகு இந்திய அணி முதல் பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in