.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்துக்கு முன்னதாக கம்பீருக்கு, முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் டிராவிட் அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் பங்கேற்பதற்காக இலங்கைக்குச் சென்றுள்ளது. இத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 7 வரை நடைபெறவுள்ளது.
டி20 ஆட்டங்கள் அனைத்தும் பல்லேகலேவிலும், ஒருநாள் ஆட்டங்கள் அனைத்தும் கொழும்புவிலும் நடைபெறவுள்ளன.
இது இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீருக்கு முதல் தொடர் ஆகும். இந்நிலையில் முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் டிராவிட், கம்பீருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்த காணொளியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
டிராவிட் பேசியதாவது
“உலகின் மிக அற்புதமான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பணிக்கு உங்களை வரவேற்கிறேன். மூன்று வாரங்களுக்கு முன்பு, பார்படோஸ் மற்றும் மும்பையில் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத சம்பவங்கள் நடந்தது.
இந்திய அணியில் நான் செய்த விஷயங்களும், வீரர்களுடனான நட்பும் என்றென்றும் என் நினைவில் இருக்கும்.
இந்திய அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற உங்களுக்கும் இவை அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஒவ்வொரு அணியிலும் முழு உடற்தகுதியுடன் உள்ள வீரர்கள் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
மேலும் உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
இத்தனை ஆண்டுகளாக இந்திய அணிக்காகவும், ஐபிஎல் போட்டிகளிலும் நீங்கள் செய்த சாதனைகளைக் கண்டு வியந்திருக்கிறேன்.
இந்திய கிரிக்கெட் மீதான உங்களது அர்ப்பணிப்பு குறித்து எனக்கு நன்றாக தெரியும். அந்த பணியைச் சிறப்பாக செய்வீர்கள் என்பதும் எனக்கு தெரியும்.
உங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும், ஆனால், எந்த கடினமான சூழலாக இருந்தாலும் நீங்கள் தனிமையாக இருக்க மாட்டீர்கள். உங்களுடன் வீரர்களும், மற்ற உதவி பயிற்சியாளர்களும் பக்கபலமாக இருப்பார்கள். இதுபோன்ற சூழலில் நிதானமாக இருக்க வேண்டும், அது உங்களுக்கு கடினமாக இருந்தாலும் பரவாயில்லை, எப்போதும் நீங்கள் முகத்தில் சிரிப்புடன் இருக்க வேண்டும்” என்றார்.