அஸ்வின், வாஷிங்டன் சுந்தரின் சுழலில் தடுமாறும் நியூசிலாந்து!

கான்வே 76 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அஸ்வின், வாஷிங்டன் சுந்தரின் சுழலில் தடுமாறும் நியூசிலாந்து!
@bcci
1 min read

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் நாள் தேநீர் இடைவேளையில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புனேவில் இன்று (அக்டோபர் 24) தொடங்கியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றமாக மேட் ஹென்றிக்கு பதிலாக மிட்செல் சான்ட்னருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. சிராஜ், கே.எல். ராகுல் மற்றும் குல்தீப் யாதவுக்கு பதிலாக கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் இடம்பெற்றனர்.

ஆரம்பம் முதல் நியூசிலாந்து அணி நிதானமாக விளையாடி உணவு இடைவேளையில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்தது. லேதம் 15 ரன்களிலும் வில் யங் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். கான்வே 47 ரன்களிலும் ரச்சின் ரவீந்திரா 5 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் விளையாடி வந்தனர்.

இதைத் தொடர்ந்து 2-வது பகுதியிலும் கான்வே - ரச்சின் ஜோடி சிறப்பாக விளையாடியது. இந்த ஜோடியை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். கான்வே அரை சதம் அடித்து அசத்த, இந்த கூட்டணியை அச்வின் பிரித்தார். கான்வே 11 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் ரச்சினும் அரை சதம் அடித்தார். இதன் பிறகு வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்துக்கு நெருக்கடி அளித்தார். அசத்தலான ஆஃப் ஸ்பின் பந்தை வீசி ரச்சின் ரவீந்திராவை 65 ரன்களில் வெளியேற்றினார். இதன் பிறகு டாம் பிளென்டல் 2-வது பகுதியின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார்.

தேநீர் இடைவேளையில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in