
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் நியூசிலாந்து அணி தடுமாறி வருகிறது.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்டில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இத்தொடரில் 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் வென்றது.
இந்நிலையில் 3-வது டெஸ்ட் இன்று (நவம்பர் 1) மும்பையில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
தொடக்க வீரரான கான்வே 4 ரன்களில் ஆகாஷ் தீப் பந்தில் வெளியேறினார். அடுத்ததாக கேப்டன் லாதம் மற்றும் வில் யங் ஜோடி சேர்ந்து பொறுமையாக ரன்களைச் சேர்த்தனர். டாம் லேதம் 28 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டமிழக்க, ரச்சின் ரவீந்திராவும் 5 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்தில் வெளியேறினார்.
இதன் பிறகு டேரில் மிட்செல் வில் யங்குடன் கூட்டணி அமைத்தார். அசத்தலாக விளையாடிய யங் அரைசதம் அடிக்க, இந்த கூட்டணி 82 ரன்கள் சேர்த்தது.
இதைத் தொடர்ந்து வில் யங் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக பிளென்டல் ரன் எதுவும் எடுக்காமலும், கிளென் பிலிப்ஸ் 17 ரன்களிலும் ஜடேஜா பந்தில் வெளியேறினர்.
இதன் மூலம் நியூசிலாந்து அணி முதல் நாளின் தேநீர் இடைவேளையில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. மிட்செல் ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.