நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புனேவில் நேற்று (அக்டோபர் 24) தொடங்கியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றமாக மேட் ஹென்றிக்கு பதிலாக மிட்செல் சான்ட்னருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. சிராஜ், கே.எல். ராகுல் மற்றும் குல்தீப் யாதவுக்கு பதிலாக கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் இடம்பெற்றனர்.
வாஷிங்டன் சுந்தர் மற்றும் அஸ்வினின் அசத்தலான பந்துவீச்சில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும், மிட்செல் சான்ட்னர் 33 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்து 243 ரன்கள் பின்தங்கியிருந்தது.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்தின் சுழலில் ஆரம்பம் முதல் திணறிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்களும் கில் மற்றும் ஜெயிஸ்வால் ஆகியோர் தலா 30 ரன்களும் எடுத்தனர்.
அதிகம் எதிர்பார்த்த கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் 18, சர்ஃபராஸ் கான் 11, அஸ்வின் 4 ரன்கள் என அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர்.
இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளையும், கிளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 2015 முதல் டெஸ்டில் விளையாடி வரும் மிட்செல் சான்ட்னர், முதல்முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 103 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.