வாஷிங்டன் சுழலில் சுருண்ட நியூசிலாந்து: முதல் நாளில் இந்தியா ஆதிக்கம்!

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
வாஷிங்டன் சுழலில் சுருண்ட நியூசிலாந்து: முதல் நாளில் இந்தியா ஆதிக்கம்!
@bcci
1 min read

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் நாள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புனேவில் இன்று (அக்டோபர் 24) தொடங்கியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றமாக மேட் ஹென்றிக்கு பதிலாக மிட்செல் சான்ட்னருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. சிராஜ், கே.எல். ராகுல் மற்றும் குல்தீப் யாதவுக்கு பதிலாக கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் இடம்பெற்றனர்.

முதல் இன்னிங்ஸில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அஸ்வினின் அசத்தலான பந்துவீச்சில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும், மிட்செல் சான்ட்னர் 33 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். டெஸ்டில் முதல்முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி அசத்தினார் வாஷிங்டன் சுந்தர்.

இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்து 243 ரன்கள் பின்தங்கியுள்ளது.

கேப்டன் ரோஹித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் சௌதி பந்தில் வெளியேறினார். ஆட்டமிழக்காமல் கில் 10 ரன்களும், ஜெயிஸ்வால் 6 ரன்களும் எடுத்தனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in