இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் 3-வது நாள் உணவு இடைவேளையில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது.
இந்நிலையில் பெங்களூருவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பம் முதல் திணறியது இந்திய அணி.
அதிகபட்சமாக ரிஷப் பந்த் 20 ரன்களும், ஜெயிஸ்வால் 13 ரன்களும் எடுக்க இந்திய அணி 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
டெஸ்டில் இந்திய அணியின் 3-வது குறைந்தபட்ச ஸ்கோராக இது அமைந்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில் ஒ ரோர்க் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன் பிறகு முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. ஆட்டமிழக்காமல் ரச்சின் ரவீந்திரா 22 ரன்களும் டேரில் மிட்செல் 14 ரன்களும் எடுத்தனர்.
முன்னதாக, கான்வே 91 ரன்களும், வில் யங் 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம் டேரில் மிட்செல் 18, டாம் பிளென்டல் 5, கிளென் பிலிப்ஸ் 14, மேட் ஹென்றி 8 ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினாலும், மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா டெஸ்டில் தனது 2-வது சதத்தை நிறைவு செய்தார்.
கடந்த 12 வருடங்களில் இந்திய மண்ணில் டெஸ்ட் சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார் ரச்சின் ரவீந்திரா.
3-வது நாள் உணவு இடைவேளையில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்து 299 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஆட்டமிழக்காமல் ரச்சின் ரவீந்திரா 104 ரன்களும், அவருடன் சிறப்பான கூட்டணியை அமைத்த டிம் சௌதி 49 ரன்களும் எடுத்துள்ளனர்.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.