முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் நியூசிலாந்து அணி!

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் நியூசிலாந்து அணி!
@BLACKCAPS
1 min read

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் 2-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது.

இந்நிலையில் பெங்களூருவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பம் முதல் திணறியது இந்திய அணி.

அதிகபட்சமாக ரிஷப் பந்த் 20 ரன்களும், ஜெயிஸ்வால் 13 ரன்களும் எடுக்க இந்திய அணி 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

டெஸ்டில் இந்திய அணியின் 3-வது குறைந்தபட்ச ஸ்கோராக இது அமைந்தது.

நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில் ஒ ரோர்க் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேட் ஹென்றி டெஸ்டில் தனது 100-வது விக்கெட்டை வீழ்த்தினார்.

இதன் பிறகு முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் லேதமும் கான்வேவும் நல்ல தொடக்கத்தை அமைத்து தந்தனர். இருவரும் சேர்ந்து 67 ரன்கள் எடுத்த நிலையில் லேதம் 15 ரன்களில் வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து வில் யங் - கான்வே கூட்டணி அமைத்தனர். முதல் இன்னிங்ஸில் வேகப்பந்துக்கு சாதகமாக இருந்த ஆடுகளம், இந்திய பந்துவீச்சாளர்களுக்கு உதவவில்லை. அசத்தலாக விளையாடிய கான்வே அரைசதம் அடித்தார். மறுமுனையில் வில் யங்கும் நிதானமாக விளையாடினார். 75 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை ஜடேஜா பிரித்தார். வில் யங் 33 ரன்களில் வெளியேற, கான்வே 9 ரன்களில் சதத்தை தவறவிட்டார். அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சில் போல்ட் ஆன கான்வே 3 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

2-வது நாள் ஆட்டம் முடிவதற்கு சிறிது நேரம் மட்டுமே இருந்த சமயத்தில், ரிஷப் பந்த் காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு பதிலாக துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பிங் செய்தார்.

2-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. ஆட்டமிழக்காமல் ரச்சின் ரவீந்திரா 22 ரன்களும் டேரில் மிட்செல் 14 ரன்களும் எடுத்தனர்.

முதல் இன்னிங்ஸில் இதுவரை 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நியூசிலாந்து அணியை இந்திய அணி எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in