இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 188 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புனேவில் நேற்று (அக்டோபர் 24) தொடங்கியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
வாஷிங்டன் சுந்தர் மற்றும் அஸ்வினின் அசத்தலான பந்துவீச்சில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும், மிட்செல் சான்ட்னர் 33 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்களும் கில் மற்றும் ஜெயிஸ்வால் ஆகியோர் தலா 30 ரன்களும் எடுத்தனர். மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளையும், கிளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸில் 103 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆரம்பம் முதல் பெரும்பாலான ஓவர்களை சுழற்பந்து வீச்சாளர்களே வீசினாலும், நியூசிலாந்து அணி பேட்டர்கள் தடுமாறாமல் நிதானமாக விளையாடினார்கள்.
கான்வே 17 ரன்களும், வில் யங் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 2-வது நாள் தேநீர் இடைவேளையில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்து 2-வது இன்னிங்ஸில் 188 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.