இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புனேவில் இன்று (அக்டோபர் 24) தொடங்கியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றமாக மேட் ஹென்றிக்கு பதிலாக மிட்செல் சான்ட்னருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒருவேளை டாஸை வென்றிருந்தால் பேட்டிங்கைத் தேர்வு செய்திருப்பேன் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சிராஜ், கே.எல். ராகுல் மற்றும் குல்தீப் யாதவுக்கு பதிலாக கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற ரஞ்சி கோப்பையில் தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய வாஷிங்டன் சுந்தர், மார்ச் 2021-க்கு பிறகு டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார்.
முன்னதாக, கே.எல். ராகுலின் ஆட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவருக்கு ஆதரவாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியிருந்தார். இருப்பினும் இந்த டெஸ்டில் ராகுல் இடம்பெறவில்லை.