ரிஷப் பந்த் காப்பாற்றுவாரா?: 2-வது இன்னிங்ஸிலும் தடுமாறும் இந்திய அணி!

தனி ரகமாக ரிஷப் பந்த் மட்டும் நியூசிலாந்தின் சுழற்பந்துவீச்சை அருமையாக எதிர்கொண்டு ரன்களை விரைவாக எடுத்தார்.
ரிஷப் பந்த் காப்பாற்றுவாரா?: 2-வது இன்னிங்ஸிலும் தடுமாறும் இந்திய அணி!
ANI
1 min read

நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்டில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் மேலும் தடுமாறி 3-வது நாள் உணவு இடைவேளையின்போது 6 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துள்ளது.

இன்று, நியூசிலாந்து அணி மீதமுள்ள ஒரு விக்கெட்டை இழந்து 2-வது இன்னிங்ஸில் 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. அஜாஸ் படேலின் விக்கெட்டை வீழ்த்திய ஜடேஜா, இரு இன்னிங்ஸிலும் தலா 5 விக்கெட்டுகளை எடுத்து மும்பை டெஸ்டில் 10 விக்கெட்டுகளுடன் தனது பழைய திறமையை மீட்டெடுத்துள்ளார். இந்திய அணிக்கு 147 ரன்கள் இலக்கு என்பதால் ஓரளவு சுலபமாகக் கரையேறிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்திய அணியின் பேட்டிங் 2-வது இன்னிங்ஸிலும் தடம்புரண்டது. ரோஹித் 11, ஜெயிஸ்வால் 5, கில் 1, கோலி 1, சர்ஃபராஸ் கான் 1, ஜடேஜா 6 என சொற்ப ரன்கள் மட்டும் எடுத்து வந்த வேகத்தில் வெளியேறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்கள். தனி ரகமாக ரிஷப் பந்த் மட்டும் நியூசிலாந்தின் சுழற்பந்துவீச்சை அருமையாக எதிர்கொண்டு ரன்களை விரைவாக எடுத்தார். இதற்கு முன்பு மும்பையில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய அஜாஸ் படேல், இந்த இன்னிங்ஸில் இதுவரை 4 விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணியை மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் மேலும் தடுமாறி 3-வது நாள் உணவு இடைவேளையின்போது 6 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பந்த் 53 ரன்களும் வாஷிங்டன் 6 ரன்களும் எடுத்துக் களத்தில் உள்ளார்கள். இந்திய அணியும் ரசிகர்களும் ரிஷப் பந்தையே மலைபோல் நம்பியிருக்கிறார்கள். இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 55 ரன்கள் தேவை. ஆறுதல் வெற்றியை அளிப்பாரா ரிஷப் பந்த்?

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in