இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற வங்கதேச அணிக்கு இன்னும் 459 ரன்கள் தேவைப்படுகிறது.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்டுகளிலும் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் சென்னையில் செப். 19 அன்று தொடங்கியது.
டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார். வங்கதேச தரப்பில் ஹசன் மஹ்மூத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணி 227 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் ஃபாலோ ஆன் வழங்காமல் 2-வது இன்னிங்ஸை தொடங்கியது.
2-வது நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்தது. ஆட்டமிழக்காமல் கில் 33 ரன்களும், ரிஷப் பந்த் 12 ரன்களும் எடுத்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
அசத்தலாக விளையாடிய பந்த், கில் ஆகிய இருவரும் சதம் அடித்தனர். 287 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது.
இதன் மூலம் வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 2-வது இன்னிங்ஸில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
தேநீர் இடைவேளையின் முடிவில் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்துள்ளது. இந்த டெஸ்டில் வெற்றி பெற வங்கதேச அணிக்கு இன்னும் 459 ரன்கள் தேவைப்படுகிறது.