வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் தேநீர் இடைவேளையின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்டுகளிலும் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் சென்னையில் தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ஆரம்பம் முதல் அசத்தலாக பந்துவீசிய ஹசன் மஹ்மூத் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்கு நெருக்கடி அளித்தார். ரோஹித் சர்மா 6 ரன்களிலும், கில் ரன் எதுவும் எடுக்காமலும், கோலி 6 ரன்களிலும் வெளியேற இந்திய அணி 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த 3 விக்கெட்டுகளையும் ஹசன் மஹ்மூத் வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து ஜெயிஸ்வால் - ரிஷப் பந்த் ஆகியோர் சிறப்பான கூட்டணியை அமைத்தனர். இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். உணவு இடைவேளையின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து 2-வது பகுதியின் தொடக்கத்தில் ரிஷப் பந்த் 39 ரன்கள் எடுத்து ஹசன் மஹ்மூத் பந்தில் வெளியேறினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஜெயிஸ்வால் அரைசதம் அடித்தார்.
இதன் பிறகு 56 ரன்கள் எடுத்த நிலையில் நஹித் ராணா பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே ராகுல் 16 ரன்களில் வெளியேறினார். இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது.
இதன் பிறகு அஸ்வின் - ஜடேஜா கூட்டணி அமைத்தனர். தேநீர் இடைவேளையின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அஸ்வின் ஆட்டமிழக்காமல் 21 ரன்களும், ஜடேஜா 7 ரன்களும் எடுத்தனர்.