வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்டுகளிலும் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் சென்னையில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்தது. அஸ்வின் 102 ரன்களும் ஜடேஜா 86 ரன்களும் எடுத்துக் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.
ஜடேஜாவிடம் இருந்து சதத்தை எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஜடேஜா 86 ரன்கள் எடுத்த நிலையில் டஸ்கின் அஹமது பந்தில் வெளியேறினார். இதன் பிறகு ஆகாஷ் தீப் 17 ரன்கள் எடுத்த வெளியேற, மறுமுனையில் அஸ்வினும் 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
முடிவில் இந்திய அணி 376 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வங்கதேச தரப்பில் ஹசன் மஹ்மூத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
ஷாட்மன் இஸ்லாம் 2 ரன்களிலும், ஸாகிர் ஹசன் 3 ரன்களிலும், மோமினுல் ஹக் ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர். 2-வது நாளின் உணவு இடைவேளையில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து 2-வது பகுதியின் தொடக்கத்திலேயே கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 20 ரன்களில் சிராஜ் பந்தில் வெளியேறினார். இதன் பிறகு முஷ்பிகுர் ரஹீம் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன் பிறகு லிட்டன் தாஸ் - ஷகிப் அல் ஹசன் கூட்டணி அமைத்து மெதுவாக ரன்களைச் சேர்த்தனர். இருவரும் சேர்ந்து 51 ரன்கள் எடுத்த நிலையில் லிட்டன் தாஸ் 22 ரன்களில் ஜடேஜா பந்தில் வெளியேறினார். இதன் பிறகு ஜடேஜாவின் அடுத்த ஓவரில் ஷகிப் அல் ஹசனும் வெளியேறினார்.
ஷகிப் அல் ஹசன் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார். இதனால் 92 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது வங்கதேசம். இதன் பிறகு மெஹிதி ஹசன் மிராஸ் சற்று நிதானமாக விளையாட ஹசன் மஹ்மூத் 9 ரன்களில் வெளியேறினார்.
இந்நிலையில் 2-வது நாள் தேநீர் இடைவேளை முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து, 264 ரன்கள் பின்தங்கியிருந்தது.
மெஹிதி ஹசன் மிராஸ் பொருமையாக விளையாட டஸ்கின் அஹமது பும்ரா பந்தில் வெளியேறினார். இது சர்வதேச கிரிக்கெட்டில் பும்ராவின் 400-வது விக்கெட் ஆகும். கடைசியாக நஹித் ராணா 11 ரன்களில் வெளியேற வங்கதேச அணி 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மெஹிதி ஹசன் மிராஸ் ஆட்டமிழக்காமல் 27 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்திய அணி 227 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் ஃபாலோ ஆன் வழங்காமல் 2-வது இன்னிங்ஸை தொடங்கியது.
இந்தியாவுக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சிக் காத்திருந்தது. கேப்டன் ரோஹித் சர்மா 5 ரன்களிலும், ஜெயிஸ்வால் 10 ரன்களிலும் வெளியேற கில் - கோலி நிதானமாக விளையாடினார்கள். இருவரும் சேர்ந்து 39 ரன்கள் சேர்த்த நிலையில் கோலி எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். ஆனால், கோலி வெளியேறிய பிறகு அது அவுட் இல்லை என்று தெரிந்ததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து 2-வது நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்து 2-வது இன்னிங்ஸில் 308 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. ஆட்டமிழக்காமல் கில் 33 ரன்களும், ரிஷப் பந்த் 12 ரன்களும் எடுத்தனர்.
இன்று ஒரே நாளில் 17 விக்கெட்டுகள் சரிந்தன. இதன் மூலம் சேப்பாக்கத்தில் அதிக விக்கெட்டுகள் எடுக்கப்பட்ட ஒரு நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது.