வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்டுகளிலும் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இத்தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் கான்பூரில் செப். 27 அன்று தொடங்கியது.
இந்த டெஸ்டுக்கு பிறகு டி20 தொடர் நடைபெறவுள்ளது. முதல் டி20 ஆட்டம் அக். 6 அன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியில் அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், ரியான் பராக், சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் ஐபிஎல் 2024-ல் கேகேஆர் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழக வீரரான வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் கடைசியாக 2021-ல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார்.
அதேபோல் ஐபிஎல் 2024-ல் தொடர்ந்து மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் பந்துவீசி எதிரணியை திணறடித்த லக்னௌ வீரரான மயங்க் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா போன்ற இளம் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய டி20 அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், ரியான் பராக், சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, மயங்க் யாதவ்.