டெஸ்டில் அதிவேகமாக 50, 100, 150, 200, 250 ரன்களை அடித்து இந்திய அணி 5 உலக சாதனைகளை படைத்துள்ளது.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்டுகளிலும் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இத்தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் செப். 27 அன்று கான்பூரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 233 ரன்கள் எடுத்தது.
இதன் பிறகு இந்திய அணி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடியது. ரசிகர்களுக்கு இது டி20 ஆட்டமா என்ற சந்தேகம் எழும் வகையில் 18 பந்துகளில் 50 ரன்களை அடித்தது. இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் அதிவேகமாக 50 ரன்களை அடித்து இந்திய அணி உலக சாதனை படைத்தது. முன்னதாக கடந்த ஜூலையில் இங்கிலாந்து அணி 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது.
அதேபோல் இந்திய அணி 61 பந்துகளில் 100 ரன்களை அடித்தது. இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் அதிவேகமாக 100 ரன்களை அடித்த அணி என்கிற உலக சாதனையையும் படைத்தது. முன்னதாக, மே.இ. தீவுகளுக்கு எதிராக 74 பந்துகளில் 100 ரன்களை அடித்து இச்சாதனையைப் படைத்திருந்தது இந்திய அணி. இதன் மூலம் தனது சொந்த சாதனையை முறியடித்து, மீண்டும் ஒரு உலக சாதனையைப் படைத்தது.
அடுத்ததாக, அதிவேகமாக 150, 200, 250 ரன்களை அடித்த அணி என்கிற உலக சாதனைகளையும் படைத்துள்ளது. இந்திய அணி 150 ரன்களை 18.2 ஓவர்களிலும், 200 ரன்களை 24.2 ஓவர்களிலும் 250 ரன்களை 30.1 ஓவர்களிலும் எட்டியது.
மேலும், சர்வதேச அளவில் அதிவேகமாக 27000 ரன்களை கடந்த வீரர் எனும் சாதனையை விராட் கோலி (594 இன்னிங்ஸ்) படைத்துள்ளார். சச்சின் 623 இன்னிங்ஸில் 27000 ரன்களை கடந்து இப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார்.