இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் 4-வது நாள் உணவு இடைவேளையில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்டுகளிலும் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இத்தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் செப். 27 அன்று கான்பூரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், பாதியில் கைவிடப்பட்டது. முதல் நாள் முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. மோமினுல் ஹக் 40 ரன்களும், முஷ்பிகுர் ரஹீம் 6 ரன்களும் எடுத்தனர்.
2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது.
இந்நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய நாளின் தொடக்கத்தில் முஷ்பிகுர் ரஹீம் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு லிட்டன் தாஸ் 13, ஷகிப் அல் ஹசன் 9 ரன்களில் அடுத்தடுத்து வெளியேற 170 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது வங்கதேசம்.
இதைத் தொடர்ந்து வங்கதேச அணியை சரிவிலிருந்து மீட்டார் மோமினுல் ஹக். அற்புதமாக விளையாடிய அவர் சதம் அடித்தார். இது அவரின் 13-வது சதமாகும்.
4-வது நாள் உணவு இடைவேளையில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்துள்ளது. ஆட்டமிழக்காமல் மோமினுல் ஹக் 102 ரன்களும், மெஹதி ஹசன் 6 ரன்களும் எடுத்துள்ளனர்.