2-வது டெஸ்ட்: தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா!

2-வது இன்னிங்ஸில் பும்ரா, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
2-வது டெஸ்ட்: தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா!
ANI
2 min read

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணிக்கு 95 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்டுகளிலும் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இத்தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் செப். 27 அன்று கான்பூரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 233 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக மோமினுல் ஹக் 107 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், அஸ்வின், ஆகாஷ் தீப் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன் பிறகு முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடியது. டெஸ்டில் அதிவேகமாக 50, 100, 150, 200, 250 ரன்களை அடித்து இந்திய அணி இன்று ஒரே நாளில் 5 உலக சாதனைகளை படைத்தது.

34.4 ஓவர்கள் மட்டுமே விளையாடிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணி 52 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஜெயிஸ்வால் 72, ராகுல் 68, கோலி 47, கில் 39 ரன்கள் எடுத்தனர். வங்கதேச அணி தரப்பில் மெஹதி ஹசன், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன் பிறகு 2-வது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி அஸ்வினின் சுழலில் தடுமாறியது. 4-வது நாள் முடிவில் 11 ஓவர்கள் மட்டுமே விளையாடி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து இன்று 5-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி அளித்தனர். மோமினுல் ஹக் 2 ரன்களில் அஸ்வின் பந்தில் வெளியேறினார். இதன் பிறகு ஷாட்மன் இஸ்லாம் - ஷாண்டோ ஆகியோர் கூட்டணி அமைத்து, நிதானமாக விளையாடினார்கள். இருவரும் சேர்ந்து 55 ரன்கள் சேர்த்த நிலையில் ஷாண்டோ 19 ரன்களில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஷாட்மன் இஸ்லாம் அரைசதம் அடித்தார். அவரும் 50 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய அனைவரும் வேகமாக விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.

லிட்டன் தாஸ் 1 ரன்னிலும், ஷகிப் அல் ஹசன் ரன் எதுவும் எடுக்காமலும், மெஹதி ஹசன் 9 ரன்களிலும் வெளியேற 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது வங்கதேச அணி. மறுமுனையில் முஷ்பிகுர் ரஹீம் மட்டும் தனியாக போராடி ரன்களை சேர்த்தார். முடிவாக அவரும் 37 ரன்களில் வெளியேற, வங்கதேச அணி 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி தரப்பில் பும்ரா, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணிக்கு 95 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in