இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் 4-வது நாள் முடிவில் வங்கதேச அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்தது.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்டுகளிலும் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இத்தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் செப். 27 அன்று கான்பூரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 233 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மோமினுல் ஹக் 107 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், அஸ்வின், ஆகாஷ் தீப் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன் பிறகு முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடியது. டெஸ்டில் அதிவேகமாக 50, 100, 150, 200, 250 ரன்களை அடித்து இந்திய அணி இன்று ஒரே நாளில் 5 உலக சாதனைகளை படைத்தது.
34.4 ஓவர்கள் மட்டுமே விளையாடிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணி 52 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஜெயிஸ்வால் 72, ராகுல் 68, கோலி 47, கில் 39 ரன்கள் எடுத்தனர். வங்கதேச அணி தரப்பில் மெஹதி ஹசன், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன் பிறகு 2-வது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி அஸ்வினின் சுழலில் தடுமாறியது. 11 ஓவர்கள் மட்டுமே விளையாடி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்தது. ஸாகிர் ஹசன் 10 ரன்களிலும், ஹசன் மஹ்மூத் 4 ரன்களிலும் வெளியேறினர். இவர்களின் விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார். இதன் மூலம் 2-வது இன்னிங்ஸில் வங்கதேச அணி 26 ரன்கள் பின்தங்கியுள்ளது. நாளை (அக். 1) கடைசி நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.