2-வது டெஸ்ட்: டி20 போல் விளையாடும் இந்திய அணி!

டெஸ்ட் வரலாற்றில் அதிவேகமாக 50 ரன்களை அடித்து இந்திய அணி உலக சாதனை படைத்தது.
2-வது டெஸ்ட்: டி20 போல் விளையாடும் இந்திய அணி!
ANI
2 min read

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டின் 4-வது நாள் தேநீர் இடைவேளையில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்டுகளிலும் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இத்தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் செப். 27 அன்று கான்பூரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், பாதியில் கைவிடப்பட்டது. முதல் நாள் முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய நாளின் தொடக்கத்தில் முஷ்பிகுர் ரஹீம் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு லிட்டன் தாஸ் 13, ஷகிப் அல் ஹசன் 9 ரன்களில் அடுத்தடுத்து வெளியேற 170 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது வங்கதேசம்.

இதைத் தொடர்ந்து வங்கதேச அணியை சரிவிலிருந்து மீட்டார் மோமினுல் ஹக். அற்புதமாக விளையாடிய அவர் சதம் அடித்தார். இது அவரின் 13-வது சதமாகும்.

4-வது நாள் உணவு இடைவேளையில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. 2-வது பகுதியில் 28 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 233 ரன்கள் எடுத்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த மோமினுல் ஹக் 107 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், அஸ்வின், ஆகாஷ் தீப் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

இதன் பிறகு முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடியது. ரசிகர்களுக்கு இது டி20 ஆட்டமா என்ற சந்தேகம் எழும் வகையில் 18 பந்துகளில் 50 ரன்களை அடித்தது. இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் அதிவேகமாக 50 ரன்களை அடித்து இந்திய அணி உலக சாதனை படைத்தது. முன்னதாக கடந்த ஜூலையில் இங்கிலாந்து அணி 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது.

ரோஹித் சர்மா 3 சிக்ஸர்களுடன் 23 ரன்கள் எடுத்து வெளியேற, மறுமுனையில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார் ஜெயிஸ்வால். 51 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்து ஜெயிஸ்வால், ஹசன் மஹ்மூத் பந்தில் ஆட்டமிழந்தார். அவருடன் கூட்டணி அமைத்த கில்லும் வேகமாக ரன்களைச் சேர்த்தார்.

தேநீர் இடைவேளையில் இந்திய அணி 16 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்துள்ளது. கில் 37 ரன்களும், ரிஷப் பந்த் 4 ரன்களும் எடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in