வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டி20-யில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா - வங்கதேசம் இடையிலான 2-வது டி20 தில்லியில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வங்கதேச அணியில் ஷொரிஃபுல் இஸ்லாமுக்கு பதிலாக தன்ஸிம் ஹசன் சேர்க்கப்பட்டார்.
இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து பவுண்டரிகளை விரட்டினாலும், இருவரும் முறையே 10, 15 ரன்களில் அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேறினர். இதன் பிறகு கேப்டன் சூர்யகுமார் யாதவும் 8 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இந்திய அணி 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதைத் தொடர்ந்து நிதிஷ் குமார் ரெட்டி - ரிங்கு சிங் கூட்டணி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை வேகமாக சேர்த்தனர். வங்கதேச அணியின் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கிய நிதிஷ் ரெட்டி தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். 21 வயதே ஆன இவர், இளம் வயதில் முதல் அரைசதத்தை அடித்த 4-வது இந்திய வீரர் என்கிற சாதனையை படைத்தார்.
மறுமுனையில் ரிங்கு சிங்கும் அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் மிரட்டலாக விளையாடினார். இந்த ஜோடி 108 ரன்கள் சேர்த்த நிலையில் நிதிஷ் ரெட்டி 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 34 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் பிறகு ரிங் சிங் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 29 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து ஹார்திக் பாண்டியா மற்றும் ரியான் பராகும் இறுதி ஓவர்களில் வேகமாக ரன்களை சேர்த்தனர்.
ஹார்திக் பாண்டியா 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 19 பந்துகளில் 32 ரன்களும், ரியான் பராக் 6 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 15 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. வங்கதேச தரப்பில் அதிகபட்சமாக ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளும், டஸ்கின் அஹமது, முஸ்தஃபிஸுர் ரஹ்மான், தன்ஸிம் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதன் பிறகு விளையாடிய வங்கதேச அணிக்கும் சிறப்பான தொடக்கம் அமையவில்லை. பர்வேஸை 16 ரன்களில் வெளியேற்றி, வழக்கம் போல் இந்திய அணிக்கு முதல் விக்கெட்டை எடுத்து கொடுத்தார் அர்ஷ்தீப் சிங்.
இதன் பிறகு கேப்டன் நஜ்முல் ஷான்டோ 11 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டமிழந்தார். வருண் சக்ரவர்த்தி தனது முதல் பந்திலேயே லிட்டன் தாஸை வெளியேற்றினார். இதன் பிறகு ஹிருதாயும் 2 ரன்களில் ஆட்டமிழக்க 10 ஓவர்களில் 70 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது வங்கதேச அணி.
வங்கதேச அணியை சரிவிலிருந்து மீட்க எந்த ஒரு கூட்டணியும் அமையவில்லை. மெஹதி ஹசன் 16 ரன்களிலும், ஜாகர் அலி ஒரு ரன்னிலும், ரிஷாத் ஹொசைன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணியில் ரியான் பராக், அபிஷேக் சர்மா ஆகியோருக்கு பந்துவீசும் வாய்ப்பு கிடைத்தது, அவர்களுக்கு விக்கெட்டும் கிடைத்தது.
ஒருவழியாக வங்கதேச அணியை மோசமான தோல்வியில் இருந்து காப்பாற்றினார் மஹ்முதுல்லா. 3 சிக்ஸர்களுடன் 39 பந்துகளில் 41 ரன்களை எடுத்து நிதிஷ் ரெட்டி பந்தில் மஹ்முதுல்லாவும் ஆட்டமிழக்க வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி 7 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது. இதில், நிதிஷ் ரெட்டி மற்றும் வருண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அர்ஷ்தீப், வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா, மயங்க் யாதவ், ரியான் பராக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
இதன் மூலம் இந்த ஆட்டத்தில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடைசி டி20 வருகிற அக். 12 அன்று நடைபெறவுள்ளது.