கில், ரிஷப் பந்த் சதம்: வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு!

2-வது இன்னிங்ஸில் 287 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது.
கில், ரிஷப் பந்த் சதம்: வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு!
ANI
1 min read

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் ரிஷப் பந்த், கில் ஆகியோர் அடுத்தடுத்து சதமடித்து அசத்தியுள்ளனர்.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்டுகளிலும் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் சென்னையில் செப். 19 அன்று தொடங்கியது.

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார். வங்கதேச தரப்பில் ஹசன் மஹ்மூத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணி 227 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் ஃபாலோ ஆன் வழங்காமல் 2-வது இன்னிங்ஸை தொடங்கியது.

2-வது நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்தது. ஆட்டமிழக்காமல் கில் 33 ரன்களும், ரிஷப் பந்த் 12 ரன்களும் எடுத்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரையும் வேகமாக உயர்த்தினர். வங்கதேச அணி எவ்வளவு முயற்சித்தும் இவர்களின் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை.

அசத்தலாக விளையாடிய பந்த் சதம் அடித்தார். இது அவரது 6-வது சதமாகும். இதன் மூலம் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர்களில் தோனியுடன் முதலிடத்தில் இணைந்துள்ளார் பந்த். இதன் பிறகு அவர் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் கில்லும் அற்புதமாக விளையாடி சதம் அடித்தார். 287 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. ஆட்டமிழக்காமல் கில் 119 ரன்களும், ராகுல் 22 ரன்களும் எடுத்தனர்.

இதன் மூலம் வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in