இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து நிதிஷ் குமார் ரெட்டி விலகல்: தகவல் | Ind v Eng

ஏற்கெனவே ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் காயம் காரணமாக நான்காவது டெஸ்டிலிருந்து விலகல் எனத் தகவல்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து நிதிஷ் குமார் ரெட்டி விலகல்: தகவல் | Ind v Eng
ANI
2 min read

இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில், இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் மான்செஸ்டரில் ஜூலை 23 அன்று தொடங்குகிறது.

டெஸ்டில் சவாலை எதிர்கொள்வதற்கு முன், டெஸ்டில் விளையாடுவதற்கான வீரர்களைத் தேர்வு செய்வதிலேயே இந்தியா சவாலை எதிர்கொண்டு வருகிறது. ஜஸ்பிரித் பும்ரா மூன்று டெஸ்டுகளில் தான் விளையாடுவார் என்பது முன்பே முடிவு செய்யப்பட்டது. முதல் மற்றும் மூன்றாவது டெஸ்டில் பும்ரா விளையாடிவிட்டதால், கடைசி இரு டெஸ்டுகளில் ஒரு டெஸ்டில் மட்டுமே அவர் பங்கேற்பார் எனத் தெரிகிறது.

ஆகாஷ் - அர்ஷ்தீப் காயம்

நான்காவது டெஸ்டில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஆகாஷ் தீப், காயம் காரணமாக விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இடக்கை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் நான்காவது டெஸ்டில் அறிமுகமாகலாம் எனப் பேச்சுகள் எழுந்தன. துரதிர்ஷ்டவசமாக இவரும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

இரு வேகப்பந்துவீச்சாளர் காயமடைந்ததால், மாற்று வேகப்பந்துவீச்சாளராக ஹரியாணாவைச் சேர்ந்த அன்ஷுல் கம்போஜைச் சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

இவர்கள் இருவரும் காயம் காரணமாக விலகியுள்ளதால், நான்காவது டெஸ்டில் பும்ரா பங்கேற்பது முக்கியமானதாக மாறியுள்ளது. முதல் மூன்று டெஸ்டுகளிலும் பங்கேற்ற ஒரே வேகப்பந்துவீச்சாளராக உள்ள முஹமது சிராஜ் அதிக ஓவர்களை வீசியிருக்கிறார். இவரைத் தவிர பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷார்துல் தாக்குர் ஆகியோர் அணியில் உள்ளார்கள்.

நிதிஷ் குமார் ரெட்டிக்கும் காயம்

இவர்களுடைய வரிசையில் தற்போது நிதிஷ் குமார் ரெட்டிக்கும் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, இவருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மூன்று வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்திருப்பது இந்திய அணிக்குச் சிக்கலாக மாறியுள்ளது.

இந்தத் தொடரில் முதல் டெஸ்டில் ஆல்-ரவுண்டராக ஷார்துல் தாக்குர் களமிறக்கப்பட்டார். பின்வரிசையில் பேட்டிங்கில் பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆல்-ரவுண்டராக அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். பேட்டிங்கில் இவர் 1 மற்றும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பந்துவீச்சிலும் இவரைப் பெரும்பாலும் மிகத் தாமதமாகவே பயன்படுத்தினார் ஷுப்மன் கில். முதல் இன்னிங்ஸ் விக்கெட் எதுவும் எடுக்காமல் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரண்டாவது டெஸ்டிலிருந்து பின்வரிசையில் பேட்டிங்கை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக பேட்டிங்கில் ஒருவரைக் குறைத்து வாஷிங்டன் சுந்தரைச் சேர்த்தார்கள். பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான ஷார்துல் தாக்குரை நீக்கி பேட்டிங் ஆல்-ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டியைச் சேர்த்தார்கள்.

ஷார்துல் தாக்குருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?

நிதிஷ் குமார் ரெட்டி இரண்டாவது மற்றும் மூன்றாவது என இரு டெஸ்டுகளில் விளையாடினார். இரண்டாவது டெஸ்டில் இரு இன்னிங்ஸிலும் தலா 1 ரன் மட்டுமே எடுத்தார். பந்துவீச்சிலும் முதல் இன்னிங்ஸில் 6 ஓவர்கள் வீசினார், விக்கெட்டு எதுவும் எடுக்கவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு ஓவர் கூட வீசவில்லை.

லார்ட்ஸ் டெஸ்டில் முறையே 30 மற்றும் 13 ரன்கள் எடுத்தார். ஆனால், பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் ஒரே ஓவரில் இரு தொடக்க வீரர்களை வீழ்த்தி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 5 ஓவர்கள் மட்டும் வீசி மீண்டும் ஸாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தினார்.

எனவே, நான்காவது டெஸ்டில் நிதிஷ் ரெட்டி தக்கவைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. காயம் காரணமாக விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதன் மூலம், இந்திய அணி மீண்டும் ஷார்துல் தாக்குரைத் தேர்வு செய்யும் எனத் தெரிகிறது. பின்வரிசையில் குழப்பத்தை உண்டாக்க வேண்டாம் என்பதற்காக ஷார்துல் தாக்குரைத் தேர்வு செய்து பெரியளவிலான மாற்றத்தை இந்திய அணி செய்யாது என எதிர்பார்க்கப்படுகிறது.

பந்த் விளையாடுவாரா?

இவர்களைத் தவிர ரிஷப் பந்தின் காயத்தின் தன்மை குறித்தும் உறுதிபடத் தெரியவில்லை. ஒருவேளை ரிஷப் பந்த் காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாதபட்சத்தில் முழுநேர பேட்டராக மட்டுமே அவர் விளையாடுவார் எனக் கூறப்படுகிறது. இது நிகழும்பட்சத்தில் விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெல் அணியில் சேர்க்கப்பட வேண்டும். துருவ் ஜுரெல் வந்தால், யாரை நீக்குவார்கள் என்ற கேள்வியும் உள்ளது.

மொத்தத்தில், நான்காவது டெஸ்ட் தொடங்கும் முன்பே வீரர்களைத் தேர்வு செய்வதில் ஷுப்மன் கில் - கௌதம் கம்பீர் கூட்டணிக்குப் பெரும் தலைவலி காத்திருக்கிறது.

Ind v Eng | India v England | India vs England | Ind vs Eng | Akash Deep | 4rth Test | Fourth Test | Arshdeep Singh | Jasprit Bumrah | Nitish Kumar Reddy | Nitish Reddy | Shardul Thakur | Rishabh Pant | Dhruv Jurel | India Tour of England | India England Test Series

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in