

2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்கிறது.
2025-26-ம் ஆண்டுக்கான உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. இந்தத் திட்டத்தின்படி, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறது.
முதலில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடுகிறது. அக்டோபர் 19 அன்று பெர்த்தில் ஒருநாள் தொடர் தொடங்குகிறது. அக்டோபர் 23-ல் அடிலெய்டில் இரண்டாவது ஒருநாள் ஆட்டமும், அக்டோபர் 25-ல் சிட்னியில் மூன்றாவது ஒருநாள் ஆட்டமும் நடைபெறுகின்றன.
இதைத் தொடர்ந்து, 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது. முதல் ஆட்டம் கான்பெராவிலும் கடைசி டி20 ஆட்டம் பிரிஸ்பேனில் நவம்பர் 8 அன்றும் நடைபெறுகின்றன.
2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன. இதற்குத் தயாராகும் வகையில் இந்த டி20 தொடர் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருநாள் தொடர்
முதல் ஒருநாள் - அக்டோபர் 19, பெர்த்
இரண்டாவது ஒருநாள் - அக்டோபர் 23, அடிலெய்ட்
மூன்றாவது ஒருநாள் - அக்டோபர் 25, சிட்னி
டி20 தொடர்
முதல் டி20 - அக்டோபர் 29, கான்பெரா
இரண்டாவது டி20 - அக்டோபர் 31, மெல்போர்ன்
மூன்றாவது டி20 - நவம்பர் 2, ஓவல்
நான்காவது டி20 - நவம்பர் 6, கோல்ட் கோஸ்ட்
ஐந்தாவது டி20 - நவம்பர் 8, பிரிஸ்பேன்
இந்தியாவுடனான தொடர்களுக்குப் பிறகு நவம்பர் 21, 2025 முதல் ஜனவரி 8, 2026 வரை ஆஷஸ் தொடரில் விளையாடுகிறது ஆஸ்திரேலியா.