தங்கப் பதக்கமின்றி ஒலிம்பிக்ஸை நிறைவுசெய்யும் இந்தியா!
மகளிர் மல்யுத்தம் காலிறுதியில் இந்திய வீராங்கனை ரித்திகா ஹூடா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்தியா இந்த ஒலிம்பிக்ஸை தங்கப் பதக்கமின்றி நிறைவுசெய்யவுள்ளது.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் ஒலிம்பிக்ஸ் நாளை நிறைவடையவுள்ள நிலையில் பதக்கப் பட்டியலில் இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன் 69-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் தங்கப் பதக்கத்துக்கான ஒரே நம்பிக்கையாக மகளிர் மல்யுத்தம் 76 கிலோ பிரிவில் களமிறங்கிய இந்திய வீராங்கனை ரித்திகா ஹூடா திகழ்ந்தார்.
ஆனால், துரதிஷ்டவசமாக டெக்னிக்கல் புள்ளிகள் அடிப்படையில் அவர் காலிறுதியில் தோல்வியடைந்தார்.
காலிறுதிச் சுற்றில் உலகின் நெ.1 வீராங்கனையான கேஸியிடம் 1-1 என்ற கணக்கில் வீழ்ந்தார்.
இதன் மூலம் இந்தியாவின் தங்கப் பதக்கத்துக்கான கடைசி வாய்ப்பும் பறிபோனது.
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா இம்முறையும் தங்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மற்றபடி துப்பாக்கிச் சுடுதலில் 3 வெண்கலம், ஆடவர் ஹாக்கி அணி ஒரு வெண்கலம், மல்யுத்தத்தில் ஒரு வெண்கலம் என்று இந்தியாவுக்கு மொத்தம் 5 பதக்கங்கள் கிடைத்தது.
2008 ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்காக ஒரு அணியாக இல்லாமல் தனித்து போட்டியிட்டு தங்கப் பதக்கம் வென்ற முதல் வீரர் எனும் சாதனையை படைத்தார் அபினவ் பிந்த்ரா.
இதன் பிறகு 2020-ல் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
இந்நிலையில் இம்முறை இந்தியா தங்கப் பதக்கமின்றி ஒலிம்பிக்ஸை நிறைவுசெய்யவுள்ளது.
ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் இதுவரை இந்தியா 10 தங்கம் வென்றுள்ளது. அதில், 8 பதக்கம் ஆடவர் ஹாக்கி அணியால் வெல்லப்பட்டவை.