
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
ஆசியக் கோப்பைப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் துபாயில் மோதின. வங்கதேசத்தில் காயம் காரணமாக கேப்டன் லிட்டன் தாஸ் களமிறங்காததால், ஜேகர் அலி கேப்டன் பொறுப்பை ஏற்றார். மொத்தம் நான்கு மாற்றங்களுடன் களமிறங்கிய வங்கதேசம் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
சூப்பர் 4 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் இலங்கையை 168 ரன்களுக்கு கட்டுப்படுத்தியதைப்போல, இந்தியாவையும் 168 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. இலங்கைக்கு எதிராக தொடக்க பேட்டர் சயிஃப் ஹசன் அரை சதம் அடித்தது மட்டுமில்லாமல், தௌஹித் ஹிரிதாயும் அரை சதம் அடித்தார். இதனால், கடைசி ஓவரில் இலங்கையை வீழ்த்தி வெற்றி கண்டது வங்கதேசம்.
இந்தியாவுக்கு எதிராகவும் சயிஃப் ஹசன் அரை சதம் அடித்தார். ஆனால், அவருக்கு உதவ தான் யாரும் இல்லை. சயிஃப் ஹசன் 51 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடித்து 69 ரன்கள் விளாசினார். 18-வது ஓவர் வரை இவர் நின்று விளையாடியதால், வங்கதேசத்துக்கு ஒரே நம்பிக்கையாகத் திகழ்ந்து வந்தார். ஆனால், பும்ரா வீசிய 18-வது ஓவரில் அவர் 9-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தவுடன் ஆட்டத்தின் முடிவு தெரிந்தது.
இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் சுழலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் மற்ற பேட்டர்கள் அனைவரும் வந்ததும் போனதுமாக இருந்தார்கள். சயிஃப் ஹசனுக்கு அடுத்தபடியாக, பர்வேஸ் ஹொசைன் எமோன் 21 ரன்கள் எடுத்தார். மற்ற எவரும் இரட்டை இலக்க ரன்களை தொடவில்லை.
வங்கதேச அணி 19.3 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக செய்ததைப்போல, வங்கதேசத்துக்கு எதிராகவும் பல கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டு இந்தியா உதவியது. இருந்தபோதிலும், 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. சூப்பர் 4 சுற்றில் இரு ஆட்டங்களிலும் வென்றதன் மூலம் இந்திய அணி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இந்திய அணியில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும் அக்ஷர் படேல், திலக் வர்மா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
முன்னதாக, இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மன் கில் வழக்கம்போல் அதிரடியான தொடக்கத்தைத் தந்தார்கள். முதல் மூன்று ஓவர்களில் மொத்தம் ஒரு பவுண்டரி உள்பட 17 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். 4-வது ஓவரிலிருந்து அதிரடி ஆட்டம் ஆரம்பித்தது.
நசும் அஹமது வீசிய 4-வது ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்ஸர் அடிக்க, கில் கூடுதலாக ஒரு பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் மட்டும் இந்தியா 21 ரன்கள் எடுத்தது. முஸ்தபிஸுர் ரஹ்மான் வீசிய 5-வது ஓவரில் அபிஷேக் சர்மா 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். முஹமது சைஃபுதின் வீசிய பவர்பிளேயின் கடைசி ஓவரில் 4 பவுண்டரிகளை நொறுக்கிவிட்டார் அபிஷேக் சர்மா. 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 72 ரன்கள் குவித்தது.
பவர்பிளே முடிந்தவுடன் சுழற்பந்துவீச்சாளர் ரிஷத் ஹொசைன் அறிமுகப்படுத்தப்பட்டார். முதல் விக்கெட்டாக ஷுப்மன் கில் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இந்திய பேட்டர்கள் அனைவரும் தடுமாறினார்கள். அபிஷேக் சர்மா மட்டும் 25 பந்துகளில் அரை சதம் அடித்து ஸ்கோரை வேகமாக உயர்த்தி வந்தார். 3-வது வரிசை பேட்டராக களமிறங்கிய ஷிவம் துபே 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 10 ஓவர்கள் முடிவில் இந்தியா 96 ரன்கள் எடுத்தது.
37 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து விளையாடி வந்த அபிஷேக் சர்மா ரன் அவுட் ஆனார். இவரே ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அதே ஓவரில் சூர்யகுமார் யாதவும் ஆட்டமிழந்தார். அடுத்த 22 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் திலக் வர்மா விக்கெட்டையும் இழந்தது இந்தியா. ஒரு கட்டத்தில் 200 ரன்களை எளிதாகக் கடக்கும் என்ற நிலையில் இருந்த இந்தியா 180 ரன்கள் எடுப்பதே சவாலானது. அக்ஷர் படேலுக்கு பந்து சரியாக மாட்டவில்லை. ஹார்திக் பாண்டியா ஓரளவுக்கு நன்றாக விளையாடி 29 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்ததன் மூலம், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் களத்தில் நேரத்தைச் செலவிடாத பேட்டர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம். கேட்சுகள் தவறவிடும் பிரச்னையை சரி செய்ய முயற்சிக்கலாம். பேட்டிங் வரிசையை, ஆட்டத்துக்கு ஆட்டம் மாற்றிக்கொண்டிருக்காமல் சரியாகத் திட்டமிடலாம். வெள்ளியன்று துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது இந்தியா.
புள்ளிகள் பட்டியலில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் தலா இரு புள்ளிகளுடன் உள்ளன. இவ்விரு அணிகளும் வியாழக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் விளையாடுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஞாயிறன்று நடைபெறும் இறுதிச் சுற்றில் இந்தியாவை எதிர்கொள்ளும். பாகிஸ்தான், வங்கதேசம் ஆட்டம் அரையிறுதியைப் போல நடைபெறவுள்ளது.
Asia Cup T20 | Asia Cup 2025 | Asia Cup | Ind v Ban | Abhishek Sharma | Jasprit Bumrah | Kuldeep Yadav |