

மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் எடுத்தார்.
மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மும்பை டிஒய் பாட்டில் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் கேப்டன் அலீஸா ஹீலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க பேட்டர் லிட்ச்ஃபீல்ட் 93 பந்துகளில் 119 ரன்கள் விளாசினார். இவருடன் கூட்டணி அமைத்த எலீஸ் பெர்ரி 77 ரன்கள் எடுத்தார். லிட்ச்ஃபீல்ட் - பெர்ரி இணை 2-வது விக்கெட்டுக்கு 133 பந்துகளில் 155 ரன்கள் சேர்த்தது.
நடுவரிசையில் ஆஸ்திரேலியாவின் வேகத்தை இந்தியப் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினார்கள். ஆஷ்லே கார்ட்னர் மட்டும் கடைசி நேரத்தில் அதிரடி காட்டி 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். 49.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் குவித்தது.
339 ரன்கள் என்ற வெற்றி இலக்கை மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை எந்தவோர் அணியும் எட்டியதே இல்லை. இந்தக் கடினமான இலக்கை நோக்கி இந்திய தொடக்க பேட்டர்கள் களமிறங்கினார்கள்.
ஷஃபாலி வர்மா 10 ரன்களுக்கும் ஸ்மிருதி மந்தனா 24 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். 59 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. இதன்பிறகு, ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 3-வது விக்கெட்டுக்கு 156 பந்துகளில் 167 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பைத் தக்கவைத்தார்கள்.
ஹர்மன்பிரீத் கௌர் 88 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தீப்தி சர்மா 17 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். விக்கெட்டுகள் சரிந்தபோதிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் சதத்தைப் பூர்த்தி செய்தார். கடைசி வரை களத்தில் நின்று வெற்றி இலக்கை அடைய வேண்டும் என்ற முனைப்பில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இருந்தார். ரிச்சா கோஷ் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
7-வது பேட்டராக களமிறங்கிய அமன்ஜோத் கௌர் 8 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 134 பந்துகளில் 14 பவுண்டரிகள் உள்பட 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 341 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச இலக்கை அடைந்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
முன்னதாக, இதே உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக 331 ரன்கள் என்ற வெற்றி இலக்கை அடைந்து ஆஸ்திரேலியா சாதனை படைத்திருந்தது. இந்தச் சாதனை தான் தற்போது இந்திய அணியால் முறியடிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 2 அன்று நடைபெறும் இறுதிச் சுற்றில் இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் டிஒய் பாட்டில் மைதானத்தில் மோதுகின்றன.
Jemimah Rodrigues produced a stunning unbeaten 127 to steer India to a record run-chase and a thrilling victory over Australia in the Women’s ODI World Cup semi-final, securing the team’s place in the final.
Women's World Cup | IND v AUS | India v Australia | Jemimah Rodrigues | Women's World Cup 2025 | Harmanpreet Kaur |