
இந்தியா - இலங்கை இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்தவுள்ளார்.
இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் பங்கேற்பதற்காக இலங்கைக்குச் செல்கிறது. இத்தொடர் ஜூலை 27 அன்று தொடங்கி ஆகஸ்ட் 7 வரை நடைபெறவுள்ளது.
டி20 ஆட்டங்கள் அனைத்தும் பல்லேகலேவிலும், ஒருநாள் ஆட்டங்கள் அனைத்தும் கொழும்புவிலும் நடைபெறவுள்ளன.
இத்தொடருக்கான இந்திய அணி ஜூலை 17 அன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தேர்வுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவருடைய பங்களிப்பில் இந்திய அணி விளையாடும் முதல் தொடர் இது.
இதில் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், இத்தொடரில் இந்திய டி20 அணியின் கேப்டனாக யார் செயல்படுவார் என்கிற எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது.
டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். கோலி, ரோஹித் ஆகியோர் ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்கவுள்ளார்கள். பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரேயஸ் ஐயருக்கு மீண்டும் ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டி20-யில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ஜடேஜா, ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை. டி20 அணியில் அபிஷேக் சர்மா, ருதுராஜுக்கு இடம் கிடைக்கவில்லை.
ஐபிஎல் போட்டிகளில் அசத்திய ஹர்ஷித் ராணா, ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய டி20 அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில் ( துணை கேப்டன்), ஜெயிஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், கலீல் அஹமது, முஹமது சிராஜ்.
இந்திய ஒருநாள் அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முஹமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்ஷர் படேல், கலீல் அஹமது, ஹர்ஷித் ராணா.