
டபிள்யுசிஎல் அரையிறுதிச் சுற்றிலும் பாகிஸ்தானுடன் விளையாட இந்திய அணி மறுப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலக சாம்பியன்ஷிப் லெஜன்ட்ஸ் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி யுவ்ராஜ் சிங் தலைமையில் களமிறங்கியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கெடுக்கும் போட்டி இது. பாகிஸ்தான் அணி முஹமது ஹபீஸ் தலைமையில் களமிறங்கியுள்ளது.
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தானின் பதில் தாக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளால் இரு நாடுகளுக்கிடையிலான உறவு மேலும் விரிசலடைந்தது.
இதன் காரணமாக லீக் சுற்றின்போது, பாகிஸ்தானை எதிர்த்து விளையாட இந்திய வீரர்கள் சிலர் மறுப்பு தெரிவித்தார்கள். இதைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த ஜூலை 20 அன்று நடைபெறவிருந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்தப் போட்டியில் ஒரு வெற்றியைக் கூட பெறாமல் இருந்த இந்திய அணி, கடைசி லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. இந்திய அணி இந்த இலக்கை 13.2 ஓவர்களில் அடைந்து மிரட்டல் வெற்றியைப் பெற்றது.
இங்கிலாந்து அணியும் ஒரு வெற்றியுடன் 3 புள்ளிகளுடன் இருந்தது. எனினும், கடைசி லீக் ஆட்டத்தில் 13.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்ததன் மூலம், நெட் ரன்ரேட் அடிப்படையில் இந்திய அணி இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்தைப் பிடித்து அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
பாகிஸ்தான் 5 ஆட்டங்களில் ஒரு தோல்வியைக்கூட சந்திக்காமல் 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா 4 வெற்றிகளைப் பெற்று 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
முதல் அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான், இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. இரு அரையிறுதி ஆட்டங்களும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளன.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்திய வீரர்கள் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, டபிள்யுசிஎல் போட்டியின் முக்கிய விளம்பரதாரர்களில் ஒன்றான ஈஸ்மைட்ரிப் நிறுவனம் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அரையிறுதிச் சுற்றுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றது. பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாட்டுடனான உறவை இயல்பாக்குவதற்கான எந்தவொரு நிகழ்ச்சியையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என ஈஸ்மைட்ரிப் தெரிவித்தது.
India Pakistan | India v Pakistan | India vs Pakistan | Ind v Pak | Ind vs Pak | World Championship of Legends | Pahalgam Attack | Operation Sindoor | Shikhar Dhawan | Semi-Final