
ஜாம்பவான்களின் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜாம்பவான்களின் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி யுவ்ராஜ் சிங் தலைமையில் களமிறங்குகிறது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கெடுக்கும் போட்டி இது. பாகிஸ்தான் அணி முஹமது ஹபீஸ் தலைமையில் களமிறங்குகிறது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் ஏற்கெனவே ஓர் ஆட்டத்தில் விளையாடி இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி கண்டுள்ளது. பாகிஸ்தான் தனது இரண்டாவது ஆட்டத்தில் இன்றிரவு 9 மணிக்கு பிர்மிங்ஹமில் இந்தியாவை எதிர்கொள்ளவிருந்தது. யுவ்ராஜ் சிங் தலைமையிலான இந்திய அணிக்கு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் தான் முதல் ஆட்டம்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவு சுமூகமாக இல்லை. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள 9 பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்தது.
இதற்கு இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால், கடந்த மே மாதம் இரு நாடுகளுக்கு இடையே போர்ப் பதற்றம் அதிகரித்தது. மே 7 அன்று இந்தியா ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்தது. மே 10 அன்று இரு நாடுகளும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டன. இந்தப் பிரச்னைக்குப் பிறகு இரு நாடுகளுக்கிடையிலான உறவு இன்னும் சீராகாமல் உள்ளது.
பஹல்காம் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான், யூசுப் பதான் உள்ளிட்டோர் மறுப்பு தெரிவித்ததாக சனிக்கிழமை தகவல்கள் வெளியாகின. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தான் விளையாட மாட்டேன் என்பதை ஏற்கெனவே கடந்த மே மாதமே தெரிவித்துவிட்டதாக ஷிகர் தவன் அறிக்கை வாயிலாகக் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்படுவதாகப் போட்டியை நடத்தும் ஜாம்பவான்களின் உலக சாம்பியன்ஷிப் அறிவித்துள்ளது.
"பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்த ஆண்டு இந்தியாவுக்கு வருகிறது. வாலிபால் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் மோதின. மேலும் சில விளையாட்டுகளில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டங்கள் உள்ளன. இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகே, ஜாம்பவான்களின் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தைத் தொடரலாம் என நாங்கள் முடிவு செய்தோம்.
இந்த நடைமுறையில் பலருடைய உணர்வுகளைப் காயப்படுத்தியுள்ளோம். இதைவிட, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு எதிர்பாராதவிதமாக ஓர் அசௌதரியத்தை ஏற்படுத்திவிட்டோம். கிரிக்கெட்டுக்காக எங்களை ஆதரிக்கும் சில பிராண்ட்களுக்கும் பாதிப்பை உண்டாக்கியுள்ளோம்.
எனவே, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். உணர்வுகளைக் காயப்படுத்தியதற்கு மீண்டும் ஒருமுறை மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். ரசிகர்களுக்கு சில மகிழ்ச்சியான தருணங்களைத் தர வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பமாக இருந்தது என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறோம்" என்று ஜாம்பவான்களின் உலக சாம்பியன்ஷிப் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
India Pakistan | India v Pakistan | India vs Pakistan | Ind v Pak | Ind vs Pak | World Championship of Legends | Pahalgam Attack | Operation Sindoor | Shikhar Dhawan