எதுவாக இருந்தாலும் சமத்துவத்தின் அடிப்படையில் நடக்க வேண்டும்: பாக். கிரிக்கெட் வாரியத் தலைவர்

"நாங்கள் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட வேண்டும், அவர்கள் பாகிஸ்தானில் விளையாட மாட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது."
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் (கோப்புப்படம்)
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் (கோப்புப்படம்)
1 min read

நாங்கள் இந்தியாவில் விளையாட வேண்டும், அவர்கள் பாகிஸ்தானில் விளையாட மாட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி கூறியுள்ளார்.

கடாஃபி மைதானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மோசின் நக்வி கூறியதாவது:

"எங்களுடைய நிலைப்பாடு தெளிவாக உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எது சிறந்ததோ, அதைச் செய்வோம் என வாக்குறுதியளித்துள்ளேன். ஐசிசி தலைவருடன் தொடர்ந்து தொடர்பிலிருந்து வருகிறேன். என்னுடைய குழுவைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து தொடர்பிலிருந்து வருகிறார்கள்.

நாங்கள் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட வேண்டும், அவர்கள் பாகிஸ்தானில் விளையாட மாட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதில் நாங்கள் தெளிவாகவே உள்ளோம். எது நடந்தாலும், அது சமத்துவத்தின் அடிப்படையில் நடக்க வேண்டும். ஐசிசியிடம் நாங்கள் தெளிவாகக் கூறிவிட்டோம். அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்பதை நாங்கள் தெரியபடுத்துவோம்" என்றார் நக்வி.

ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி அடுத்தாண்டு பிப்ரவரி, மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட இந்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என பிசிசிஐ தரப்பில் ஐசிசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி கூட்டம் நாளை (நவம்பர் 29) கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் இதற்குத் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா விளையாடும் ஆட்டங்களை மட்டும் பாகிஸ்தானுக்கு வெளியே நடத்த, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவிக்கவில்லை. கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையின்போது பாகிஸ்தான் இங்கு வந்து விளையாடியது.

கடந்தாண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பையின்போதும் இந்திய அணி பாகிஸ்தான் செல்லவில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in