மகளிர் ஆசியக் கோப்பை போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.
மகளிர் ஆசியக் கோப்பைப் போட்டி ஜூலை 19 அன்று தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
முதல் அரையிறுதியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின.
டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. கேப்டன் நிகர் சுல்தானா தவிர வேறு யாரும் பெரியளவில் ரன்களை எடுக்கவில்லை.
ரேணுகா சிங், ராதா யாதவின் அசத்தலான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது வங்கதேச அணி. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 80 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கேப்டன் நிகர் சுல்தானா அதிகபட்சமாக 51 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங், ராதா யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி மந்தனா - ஷெஃபாலி வெர்மா ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் 9 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மந்தனா ஆட்டமிழக்காமல் 39 பந்துகளில் ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 55 ரன்களும், ஷெஃபாலி வெர்மா ஆட்டமிழக்காமல் 28 பந்துகளில் 26 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
2-வது அரையிறுதி சுற்றில் பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் மோதுகின்றன.