மகளிர் டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி

தோல்வி குறித்து பேசிய ஹர்மன்பிரீத் கௌர், ஃபீல்டிங்கில் சில தவறுகளைச் செய்ததாகக் குறிப்பிட்டார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
2 min read

மகளிர் டி20 உலகக் கோப்பை முதல் ஆட்டத்தில் இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்துள்ளது.

மகளிர் டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று நியூசிலாந்தை துபாயில் எதிர்கொண்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் சோஃபி டெவின் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

சூஸி பேட்ஸ் முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டி நியூசிலாந்துக்கு அதிரடி தொடக்கத்தைத் தந்தார். தொடக்க பேட்டர்கள் அவ்வப்போது பவுண்டரிகள் அடிக்க பவர்பிளேயில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்தது.

பவர்பிளே முடிந்தவுடன் சூஸி பேட்ஸ் (27 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தி கூட்டணியைப் பிரித்தார் அருந்ததி ரெட்டி. அடுத்த ஓவரிலேயே மற்றொரு தொடக்க பேட்டர் பிலிம்மர் (34 ரன்கள்) ஆஷா ஷோபனாவிடம் வீழ்ந்தார்.

10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது.

சோஃபி டெவின் 13-வது ஓவரிலும், 15-வது ஓவரிலும் இருமுறை அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்தார். மற்றபடி அமெலியா கெர் 22 பந்துகளை எதிர்கொண்டு 13 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததுபோல இருந்தது. 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து.

சோஃபி டெவின் கேப்டன் என்ற முறையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கடைசிக் கட்டம் என்பதால், அதிரடியாகவும் ரன் குவித்தார். தீப்தி ஷர்மா வீசிய 18-வது ஓவரில் புரூக் ஹாலிடேவும் இரு பவுண்டரிகள் அடித்து ஆறுதல் அளித்தார்.

ஆனால், சோஃபி டெவின் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியின் ஸ்கோரை 160-க்கு எடுத்துச் சென்றார். 33 பந்துகளில் அரை சதத்தை எட்டிய அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 36 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் ரேணுகா சிங் 2 விக்கெட்டுகளையும், அருந்ததி ரெட்டி மற்றும் ஆஷா ஷோபனா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

161 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஸ்மிருதி மந்தனா முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி நேர்மறையான தொடக்கத்தையே தந்தார். இது நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. ஈடன் கார்சன் வீசிய முதல் பந்திலேயே ஷெஃபாலி வர்மா (2) ஆட்டமிழந்தார். இவருடைய அடுத்த ஓவரில் மந்தனாவும் (12) ஆட்டமிழந்தார். துணை கேப்டனை தொடர்ந்து கேப்டன் ஹர்மன்பிரீத் கௌரும் (15) பவர்பிளேயில் ஆட்டமிழந்தார்.

6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்தது. ஒரு பெரிய கூட்டணி அமைக்க வேண்டிய பொறுப்பு இந்திய அணிக்கு இருந்தது. துரதிருஷ்டவசமாக இந்திய அணிக்கு இது அமையவில்லை. வந்த பேட்டர்கள் அனைவரும் அடுத்தடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்கள். ஹர்மன்பிரீத் கௌருக்கு பிறகு எந்தவொரு பேட்டராலும் 15 ரன்களைத் தொட முடியவில்லை.

இதனால், ஆட்டம் முழுக்க நியூசிலாந்து கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இந்தியா வெல்வதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவாகவே இருந்தது.

இந்திய அணி 19 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், நியூசிலாந்து 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோல்வி குறித்து பேசிய ஹர்மன்பிரீத் கௌர், ஃபீல்டிங்கில் சில தவறுகளைச் செய்ததாகக் குறிப்பிட்டார். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானை வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in