இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த ஜிம்பாப்வே அணி!

சிறப்பாக பந்துவீசிய சட்டாரா மற்றும் சிகந்தர் ராஸா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த ஜிம்பாப்வே அணி!
இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த ஜிம்பாப்வே அணி!@ZimCricketv

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான முதல் டி20 ஆட்டத்தில் ஜிம்பாப்வே 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா- ஜிம்பாப்வே இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியது. அனைத்து ஆட்டங்களும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெறுகின்றன.

முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜுரெல் ஆகியோர் தங்களது முதல் டி20 ஆட்டத்தில் விளையாடினர்.

மாதவேர் நிதானமான தொடக்கத்தை அமைத்து தந்தார். மறுமுனையில் கையா ரன் எதுவும் எடுக்காமல் முகேஷ் குமார் வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன் பிறகு பென்னட் அதிரடியாக விளையாடினாலும், நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 5 பவுண்டரிகளுடன் 15 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து பென்னட் வெளியேறினார். இதன் பிறகு மாதவேரும் 21 ரன்களில் வெளியேற அடுத்து வந்த யாரும் பெரியளவில் ரன்களை எடுக்கவில்லை.

கேப்டன் சிகந்தர் ராஸா 17 ரன்களிலும், மையர்ஸ் 23 ரன்களிலும் வெளியேற, மடாண்டே மட்டும் கடைசி வரை போராடினார்.

ரவி பிஷ்னாய் மற்றும் வாஷிங்டன் சுந்தரின் சுழலில் தடுமாறி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது ஜிம்பாப்வே அணி.

ஆட்டமிழக்காமல் விளையாடிய மடாண்டே 4 பவுண்டரிகளுடன் 25 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னாய் 4 விக்கெட்டுகளும், சுந்தர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சிக் காத்திருந்தது. அபிஷேக் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் முதல் ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன் பிறகு கேப்டன் கில் மட்டும் ஒரு பக்கம் நிதானமாக விளையாட மறுமுனையில் கெயிக்வாட் 7, ரியான் பராக் 2, ரிங்கு சிங் 0, துருவ் ஜுரெல் 6 ரன்களில் அடுத்தடுத்து வெளியேற 43 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி.

கில் 5 பவுண்டரிகளுடன் 29 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியானது.

சட்டாரா மற்றும் சிகந்தர் ராஸா அருமையாக பந்துவீசனர். சுந்தர் களத்தில் இருக்கும் வரை ஓரளவுக்கு நம்பிக்கை இருந்தது. இருப்பினும் அவருடன் யாரும் கூட்டணி அமைக்கவில்லை என்பதால் இந்திய அணி 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சுந்தர் 34 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்தார்.

ஜிம்பாப்வே அணி தரப்பில் அதிகபட்சமாக சட்டாரா மற்றும் சிகந்தர் ராஸா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது ஜிம்பாப்வே அணி.

2-வது டி20 நாளை (ஜூலை 7) நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in