
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து 310 ரன்கள் பின்தங்கியுள்ளது.
மெல்போர்ன் டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்திருந்தது.
68 ரன்களுடன் களத்திலிருந்த ஸ்டீவ் ஸ்மித் டெஸ்டில் 34-வது சதத்தைப் பூர்த்தி செய்தார். ஸ்மித் - கம்மின்ஸ் இணை 7-வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்து இந்தியாவுக்கு சிக்கல் கொடுத்தது.
ஆஸ்திரேலியா 400 ரன்களை கடக்க, கம்மின்ஸ் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சதமடித்த ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களுக்கு 9-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டை பும்ரா வீழ்த்த ஆஸ்திரேலிய அணி 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து, இந்திய அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடர்ந்தது. தொடக்க பேட்டராக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் ஏமாற்றம் அளித்து, இரண்டாவது ஓவரிலேயே 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மூன்றாவது பேட்டராக களமிறங்கிய கேஎல் ராகுல், ஜெயிஸ்வாலுடன் இணைந்து நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இருவரும் அழகான டிரைவ் மூலம் பவுண்டரிகள் அடித்தது, இவர்கள் நல்ல ஃபார்மில் இருப்பதை உணர்த்தியது. தேநீர் இடைவேளைக்கு முன்பு, கம்மின்ஸ் ஸ்டம்பு லைனில் அற்புதமாகப் பந்துவீச, ராகுல் அதைத் தவறவிட்டு போல்டானார்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு, ஜெயிஸ்வால், கோலி இணைந்து சிறப்பான கூட்டணியை அமைத்தார்கள். ஜெயிஸ்வால் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து அரைசதத்தைக் கடக்க, கோலி நிதானம் காட்டினார்.
3-வது விக்கெட்டுக்கு இந்தக் கூட்டணி 100 ரன்களை கடந்த நிலையில், மிட் ஆன் பகுதியில் பந்தை விளையாடி, ரன்னுக்கு அழைத்தார் ஜெயிஸ்வால். ஆனால், பந்தைப் பார்த்துக் கொண்டிருந்த கோலி ரன்னுக்குச் செல்லவில்லை. சதத்துக்குத் தகுதியான முறையில் பேட்டிங் செய்து வந்த ஜெயிஸ்வால் 82 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். ஓய்வறைக்குச் செல்லும்போது, இது என்னுடைய அழைப்பு, நீங்கள் வந்திருக்க வேண்டும் என்ற வகையில் கோலியிடம் செய்கைக் காண்பித்தார்.
36 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி, அடுத்த ஓவரிலேயே போலண்ட் பந்தில், மீண்டும் ஸ்டம்புகளுக்கு வெளியே வந்த பந்தைத் தொட்டு ஆட்டமிழந்தார். ஜெயிஸ்வால் ஆட்டமிழந்தவுடன் நைட் வாட்ச் மேனாக வந்த ஆகாஷ் தீப்பும் போலண்ட் பந்தில் டக் அவுட் ஆனார்.
கடைசி 15 நிமிடங்களில் வேகமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து இன்னும் 310 ரன்கள் பின்தங்கியுள்ளது. ரிஷப் பந்த் 6 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள்.