உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ் இறுதிச் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.
ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ் டி20 போட்டி கடந்த ஜூலை 3 அன்று தொடங்கியது.
இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மே.இ. தீவுகள், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் விளையாடின.
லீக் சுற்றின் முடிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் வெளியேறி மற்ற 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவையும், பாகிஸ்தான் அணி மே.இ. தீவுகள் அணியையும் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சோயிப் மாலிக் 41 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அனுரீத் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்ளை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ராபின் உத்தப்பா 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 30 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் முதல்முறையாக நடைபெற்ற உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.