ஓவல் மைதான ஆடுகளப் பராமரிப்பாளருடன் கம்பீர் வாக்குவாதம்! | Gautam Gambhir

"நீங்கள் வெறும் ஆடுகளப் பராமரிப்பாளர் தான். உங்களுடைய வரம்புக்குள் இருக்க வேண்டும்."
ஓவல் மைதான ஆடுகளப் பராமரிப்பாளருடன் கம்பீர் வாக்குவாதம்! | Gautam Gambhir
1 min read

ஓவல் மைதான ஆடுகளப் பராமரிப்பாளருடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இங்கிலாந்துக்குப் பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் நான்கு டெஸ்டுகள் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.

மான்செஸ்டரில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், இரு அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் வியாழனன்று தொடங்குகிறது.

இந்த டெஸ்டுக்கான பயிற்சியில் இந்திய அணி செவ்வாய்க்கிழமை ஈடுபட்டது. அப்போது ஓவல் மைதானத்தின் ஆடுகளப் பராமரிப்பாளர் லீ ஃபார்டிஸ் மற்றும் கௌதம் கம்பீர் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது.

பயிற்சியின்போது, இந்திய அணி பெரும்பாலான பிரதான ஆடுகளங்களைப் பயன்படுத்தியது ஃபார்டிஸுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை எனத் தெரிகிறது. மேலும், இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சிலர் ஆடுகளத்துக்கு மிக அருகில் சென்றதாகவும் தெரிகிறது.

இதுபற்றி செய்தியாளர்கள் பலமுறை கேள்வியெழுப்பியும் ஃபார்டிஸ் பதிலளிக்கவில்லை. ஆனால், கம்பீருடனான வாக்குவாதத்தின்போது, ஐசிசி ஆட்ட நடுவரிடம் முறையிடுவேன் என எச்சரித்துப் பேசினார்.

இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் சிடன்ஷு கோடக், ஃபார்டிஸுடன் உரையாடினார். இடைமறித்த கம்பீர், "அவருடன் (ஃபார்டிஸ்) பேச வேண்டாம். அவர் ஆட்ட நடுவரிடம் முறையிட்டுக் கொள்ளட்டும்" என்று கூறியிருக்கிறார்.

ஃபார்டிஸ் நோக்கி கம்பீர் ஆக்ரோஷமாக வாதிடுகையில், "நீங்கள் நிறுத்துங்கள். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டாம். என்னுடைய அணி என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டாம். அதைச் சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. நீங்கள் வெறும் ஆடுகளப் பராமரிப்பாளர் தான். உங்களுடைய வரம்புக்குள் இருக்க வேண்டும். ஆடுகளப் பராமரிப்பாளரைத் தாண்டி நீங்கள் எதுவும் இல்லை. வெறும் ஆடுகளப் பராமரிப்பாளர் தான்" என்று கம்பீர் கூறினார்.

பிறகு உதவிப் பயிற்சியாளர் கோடக் செய்தியாளர்களிடம் பேசுகையில், கம்பீர் - ஃபார்டிஸ் இடையிலான உரையாடலை விவரிக்கவில்லை. "நாளை மறுநாள் ஆட்டம் நடைபெறும் நிலையில் ரப்பர் ஸ்பைக்களுடன் ஆடுகளத்தைப் பார்வையிட்டோம். அதில் எந்தத் தவறும் இல்லை. 2.5 மீட்டர் தள்ளியிருந்து பார்க்குமாறு கூறியது ஆச்சர்யமளித்தது. ஆடுகளப் பராமரிப்பாளர்களும் உயர் திறன் கொண்ட அறிவுஜீவிகளிடம் பேசுகிறோம் என்பதை உணர வேண்டும்" என்றார்.

Gautam Gambhir | Team India | Indian Cricket Team | India v England | Ind v Eng | India vs England | Ind vs Eng | Oval Test | Fifth Test | India Tour of England | India England Test Series

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in