முதல் டெஸ்ட்: மே.இ. தீவுகளுக்கு எதிராக இந்தியா இன்னிங்ஸ் வெற்றி! | Ind v WI |

பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்தியா, டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
முதல் டெஸ்ட்: மே.இ. தீவுகளுக்கு எதிராக இந்தியா இன்னிங்ஸ் வெற்றி! | Ind v WI |
https://x.com/BCCI
2 min read

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவுக்குப் பயணம் செய்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் இரு டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் அஹமதாபாதில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் கேஎல் ராகுல், துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சதமடித்தார்கள். இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்கள் எடுத்து, 286 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ரவீந்திர ஜடேஜா 104 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மூன்றாவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் மேற்கொண்டு பேட்டிங்கை தொடங்காமல் டிக்ளேர் செய்தது. அதாவது, இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் எடுத்திருந்த 448 ரன்களுடன் இந்திய அணி டிக்ளேர் செய்தது.

286 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது மேற்கிந்தியத் தீவுகள். அந்த அணிக்கு மீண்டும் பேட்டிங் கைக்கொடுக்கவில்லை. முஹமது சிராஜ் பந்தில் நிதிஷ் குமாரின் மிரட்டலான கேட்சில் டேஜ்நரைன் சந்தர்பால் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

முதல் விக்கெட்டுக்கு பிறகு உணவு இடைவேளை வரை ஆட்டத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள். ஜான் கேம்பெல், பிரண்டன் கிங், ஷே ஹோப் ஆகியோரை ரவீந்திர ஜடேஜா வீழ்த்தினார். குல்தீப் யாதவ் சுழலில் கேப்டன் ராஸ்டன் சேஸ் ஆட்டமிழந்தார். 3-வது நாள் உணவு இடைவேளையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 66 ரன்கள் எடுத்திருந்தது.

உணவு இடைவேளைக்குப் பிறகு வாஷிங்டன் சுந்தர் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்களைக் கொண்டு தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஷுப்மன் கில். அந்த அணியில் நம்பிக்கையளிக்கும் வகையில் பேட்டிங்கை வெளிப்படுத்திய ஒரே வீரரான அலிக் ஆதனேஸ் 38 ரன்களுக்கு வாஷிங்டன் சுந்தர் ஓவரில் அவரிடமே கேட்ச் ஆனார். 25 ரன்கள் எடுத்து விளையாடி வந்த ஜஸ்டின் கிரீவ்ஸ் மற்றும் ஜோமெல் வாரிகன் ஆகியோரை ஒரே ஓவரில் வீழ்த்தினார் சிராஜ். 100 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது மேற்கிந்தியத் தீவுகள்.

கடைசி இரு விக்கெட்டுக்கு லெய்ன் மற்றும் பியர் பவுண்டரிகளாக அடிக்கத் தொடங்கினார்கள். ஜடேஜா மீண்டும் கொண்டுவரப்பட, லெய்ன் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜேடன் சீல்ஸ் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அதிரடிக்கான முனைப்பை வெளிப்படுத்தினார். ஜடேஜா ஓவரில் சிக்ஸர் அடிக்க முடிந்த அவருடைய அதிரடி, குல்தீப் யாதவிடம் எடுபடவில்லை. குல்தீப் பந்தில் கடைசி விக்கெட்டாக அவர் ஆட்டமிழந்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணி 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் சிராஜ் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் 2 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

இதன்மூலம், முதல் டெஸ்டில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் அக்டோபர் 10 அன்று தில்லியில் தொடங்குகிறது.

Ind v WI | India v West Indies | India v Windies | Ahmedabad Test | Mohammed Siraj | Ravindra Jadeja | Kuldeep Yadav |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in