பேஸ்பாலை விரட்டியடித்த இந்தியா: 4-1 என டெஸ்ட் தொடரில் வெற்றி!

அஸ்வின் 5 விக்கெட்டுகளுடன் இந்த டெஸ்டில் மொத்தமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பேஸ்பாலை விரட்டியடித்த இந்தியா: 4-1 என டெஸ்ட் தொடரில் வெற்றி!
ANI

பேஸ்பாலை விரட்டியடித்தது இந்தியா. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என வென்றது. சொந்த மண்ணில் இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலை அளிக்கும் என்கிற பேஸ்பால் உத்தி இம்முறை முதல்முறையாகத் தோல்வி கண்டுள்ளது.

தரம்சாலா டெஸ்டில் முதல் இரு நாள்களிலும் ஆதிக்கம் செலுத்திய இந்தியா முதல் இன்னிங்ஸில் 477 ரன்கள் எடுத்தது. குல்தீப் யாதவ் 30 ரன்களிலும் பும்ரா 20 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். ஆண்டர்சன் 700 விக்கெட் என்கிற மைல்கல்லை எட்டினார். சோயிப் பஷிர் 5 விகெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் முன்னிலை பெற்றது இந்தியா.

இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரின் கடைசி இன்னிங்ஸிலும் தடுமாறும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படியே நடந்தது. புதியப் பந்தைக் கொண்டு ஆரம்பத்திலிருந்து மளமளவென விக்கெட்டுகள் எடுத்தார் அஸ்வின். முதல் ஆறு பேட்டர்களில் 4 விக்கெட்டுகளை அவர் தான் வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் குல்தீப் ஆதிக்கம் செலுத்தியது போல. அப்போதே இங்கிலாந்தின் இன்னிங்ஸ் தோல்வி உறுதியானது. ஸ்டோக்ஸை மீண்டுமொரு முறை வீழ்த்தினார் அஸ்வின். இதுபோல 100-வது டெஸ்ட் அவருக்கு அமர்க்களமாக அமைந்தது.

ஸாக் கிராலி டக் அவுட் ஆனார். பென் டக்கெட் 2 ரன்களுக்கு முன்னேறி வந்து அடிக்க நினைத்து, அஸ்வின் பந்தில் போல்ட் ஆனார். போப் 19 ரன்களுக்கு அஸ்வின் பந்தில் ஆட்டமிழக்க, பேர்ஸ்டோவை 39 ரன்களுக்கு வீழ்த்தினார் குல்தீப் யாதவ். இதன்பிறகு ஒரே ஓவரில் ஹார்ட்லி, மார்க் வுட் விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தை மேலும் நிலைகுலைய வைத்தார் பும்ரா. ஜோ ரூட் பொறுப்புடன் விளையாடினார். அரை சதமெடுத்து கடைசி விக்கெட்டாக 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இங்கிலாந்தின் பேஸ்பால் கனவுகள் இந்தியாவில் சுக்குநூறான தருணம் அது. எலலாம் முடிந்தது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த டெஸ்ட் தொடர், 4-1 என இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்துள்ளது.

3-வது நாளில் 2-வது இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து. இதனால் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அஸ்வின் 5 விக்கெட்டுகளுடன் இந்த டெஸ்டில் மொத்தமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகன் விருது குல்தீப் யாதவுக்கும் தொடர் நாயகன் விருது ஜெயிஸ்வாலுக்கும் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in