Breaking News

மருத்துவமனை சென்றுள்ள பும்ரா: ஆஸ்திரேலியா 181 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

பும்ரா இல்லாமல் கடைசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணி.
மருத்துவமனை சென்றுள்ள பும்ரா: ஆஸ்திரேலியா 181 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
1 min read

சிட்னி டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. ரோஹித் சர்மா விலகியதையடுத்து, கேப்டன் பொறுப்பை பும்ரா ஏற்றுக்கொண்டார். டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார் பும்ரா. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி உஸ்மான் கவாஜாவை இழந்து 9 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. தொடங்கிய நான்காவது ஓவரிலேயே லபுஷேன் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார் பும்ரா.

இந்தச் சரிவிலிருந்து மீள்வதற்குள் சாம் கோன்ஸ்டஸ் மற்றும் டிராவிஸ் ஹெட்டை ஒரே ஓவரில் வீழ்த்தி மிரட்டினார் சிராஜ்.

ஆஸ்திரேலிய அணி 39 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டர் கூட்டணி அமைத்தார்கள். 5-வது விக்கெட்டுக்கு 50 ரன்களை சேர்த்தார்கள். உணவு இடைவேளைக்கு சற்று முன்னதாக, ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தி கூட்டணியை பிரித்தார் பிரசித் கிருஷ்ணா.

உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு ஒரு ஓவரை மட்டுமே வீசிய பும்ரா, களத்திலிருந்து வெளியேறினார். அவர் வீசிய ஓவரிலும் பந்தின் வேகம் மணிக்கு 120, 130 வேகத்தில் தான் இருந்தது. உடனடியாகக் களத்திலிருந்து வெளியேறினார்.

இதன்பிறகு சிராஜ், பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் ரெட்டி, ஜடேஜா மட்டுமே பந்துவீசினார்கள்.

வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி கூட்டணி பெரிய கூட்டணியாக மாறவிருந்த தருணத்தில் மீண்டும் கூட்டணியைப் பிரித்தார் பிரசித் கிருஷ்ணா. கேரி 21 ரன்களுக்கு போல்டானார்.

அறிமுக வீரர் வெப்ஸ்டர் அரை சதம் அடித்து நம்பிக்கையளித்தார். இந்தத் தொடரில் தலைவலியாக இருந்த கம்மின்ஸ் விக்கெட்டை நிதிஷ் ரெட்டி எடுத்தார். அடுத்த பந்தில் ஸ்டார்கையும் காலி செய்தார் நிதிஷ் ரெட்டி. அரை சதம் அடித்த வெப்ஸ்டரையும் பிரசித் கிருஷ்ணா வீழ்த்தினார்.

நேதன் லயன், ஸ்காட் போலண்ட் கடைசி விக்கெட்டுக்கு சிக்கல் கொடுப்பார்களா என்று பார்த்தபோது, 15 ரன்களை மட்டுமே அவர்களால் சேர்க்க முடிந்தது. ஆஸ்திரேலிய அணி 181 ரன்கள் எடுத்திருந்தபோது, போலண்டை சிராஜ் போல்ட் செய்தார்.

இந்திய அணி 4 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா ஆட்டமிழந்தவுடன் தேநீர் இடைவேளை எடுக்கப்பட்டது.

இந்திய அணியில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளையும் பும்ரா, நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

பும்ரா இல்லாமல் கடைசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணி. காயம் காரணமாக வெளியேறிய பும்ரா, ஸ்கேன் எடுப்பதற்காக மருத்துவமனை சென்றுள்ளார் என்பது சமீபத்திய தகவல்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in