அமெரிக்காவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்ற இந்திய அணி!

அசத்தலாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
அமெரிக்காவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்ற இந்திய அணி!
அமெரிக்காவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்ற இந்திய அணி!ANI

அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 2 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்போட்டியின் 25-வது ஆட்டத்தில் இந்தியா - அமெரிக்கா அணிகள் இன்று நியூயார்கில் விளையாடின.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அமெரிக்க அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான மொனாக் படேல் காயத்தால் விலக ஜோன்ஸ் கேப்டனாக செயல்பட்டார். அமெரிக்க அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரரான ஜஹாங்கீர் மற்றும் கோஸ் ஆகியோர் அர்ஷ்தீப் சிங்கின் ஒரே ஓவரில் அடுத்தடுத்து வெளியேறினர்.

இதன் பிறகு அதிகம் எதிர்பார்த்த ஆரோன் ஜோன்ஸ் 22 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் அவருடன் கூட்டணி அமைத்த ஸ்டீவன் டெய்லர் 2 சிக்ஸர்களுடன் 30 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து நிதிஷ் குமார் பொறுப்புடன் விளையாடி 23 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அர்ஷ்தீப் சிங் பந்தில் வெளியேறினார். அடுத்ததாக கோரி ஆண்டர்சன் 15 ரன்கள் எடுத்து வெளியேற, 20 ஓவர்கள் முடிவில் அமெரிக்க அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது.

அசத்தலாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் விசி 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பையில் ஒரு இந்திய பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சாக இது அமைந்தது. மேலும் டி20-யில் அர்ஷ்தீப் சிங்கின் சிறந்த பந்துவீச்சாகவும் இது அமைந்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சிக் காத்திருந்தது. கோலி 2-வது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இதன் பிறகு ரோஹித் சர்மாவும் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். இவர்களது விக்கெட்டுகளை நெட்ராவால்கர் வீழ்த்தினார்.

இதன் பிறகு ரிஷப் பந்த் - சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் சேர்ந்து நிதானமாக விளையாடி 29 ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடியை முகமது அலி கான் பிரித்தார். ரிஷப் பந்த் 20 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்தது.

இதன் பிறகு துபே மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கூட்டணி அமைத்தனர். அடிக்கவேண்டிய பந்துகளை மட்டும் பவுண்டரியை நோக்கி அடித்து மற்ற பந்துகளில் ஒரு ரன், இரண்டு ரன்கள் என எடுத்து அருமையாக விளையாடியது இந்த ஜோடி.

30 பந்துகளில் 35 ரன்கள் தேவைப்பட்டது. மூன்று முறை ஒரு ஓவரில் இருந்து அடுத்த ஓவரை வீச அதிக நேரத்தை அமெரிக்க அணி எடுத்துக் கொண்டதால் அபராதமாக 5 ரன்கள் குறைக்கப்பட்டது. இது இந்திய அணிக்கு மேலும் சாதகமாக அமைந்தது.

சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் அரைசதம் அடித்தார். இதனால் இந்திய அணி 10 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 6 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

ஆட்டமிழக்காமல் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 49 பந்துகளில் 50 ரன்களும், துபே ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 35 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர். இந்த ஜோடி 67 ரன்கள் சேர்த்தது. அர்ஷ்தீப் சிங் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் கனடாவுடன் ஜூன் 15 அன்று மோதுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in