ஆசியக் கோப்பையில் தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை 57 ரன்களுக்கு சுருட்டி 4.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்து இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆசியக் கோப்பை டி20 போட்டி அபுதாபியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று (புதன்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தை (யுஏஇ) எதிர்கொண்டது.
துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக ஷிவம் துபேவைக் கொண்டு களமிறங்கியது. ஷுப்மன் கில் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவருக்குமே அணியில் இடம் கிடைத்தது.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அலிஷான் ஷரஃபு மற்றும் கேப்டன் முஹமது வசீம் ஓரளவுக்கு நல்ல தொடக்கத்தையே தந்தார்கள். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 26 ரன்கள் சேர்த்தார்கள். 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் விளாசிய ஷரஃபு முதல் விக்கெட்டாக பும்ரா பந்தில் 22 ரன்களுக்கு போல்டானார்.
இதன்பிறகு, ஐக்கிய அரபு அமீரக பேட்டர்களை இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் சுருட்டினார்கள். முஹமது வசீம் 19 ரன்களுக்கு குல்தீப் யாதவ் சுழலில் வீழ்ந்தார். அடுத்து வந்த பேட்டர்கள் யாராலும் 5 ரன்களை கூடத் தொட முடியவில்லை.
குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசியில் ஷிவம் துபே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 13.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஐக்கிய அரபு அமீரகம் 57 ரன்களுக்கு சுருண்டது. கடைசி 8 விக்கெட்டுகளை 10 ரன்களுக்கு இழந்தது.
மிக எளிதான இலக்கை விரட்ட தொடக்க பேட்டர்களாக அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினார்கள். முதலிரு பந்துகளில் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து ஆட்டத்தை வேகமாக முடிக்க வேண்டும் என்ற முனைப்பை வெளிப்படுத்தினார் அபிஷேக் சர்மா. ஷுப்மன் கில்லும் இதே முனைப்புடன் அதிரடியாக விளையாடினார். 16 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்த அபிஷேக் சர்மா ஜுனைட் சித்திக் பந்தில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதல் பந்தையே சிக்ஸருக்கு அனுப்பினார். அடுத்த ஓவரிலேயே பவுண்டரி அடித்த ஷுப்மன் கில் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். 4.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்த இந்தியா 93 பந்துகள் மீதமிருக்க 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கில் 9 பந்துகளில் 20 ரன்களுடனும் சூர்யகுமார் யாதவ் 2 பந்துகளில் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இந்திய அணிக்குக் கடும் போட்டியாகத் திகழ ஆசியக் கோப்பையில் எந்தவோர் அணியும் இல்லாததால், இப்போட்டி சுவாரஸ்யமாக இல்லை என அஸ்வின் கூறியிருந்தார். இதற்கேற்ப இந்திய அணியின் முதல் ஆட்டம் அமைந்துள்ளது.
Asia Cup T20 | Asia Cup | Team India | Indian Cricket Team | Kuldeep Yadav | Shivam Dube | Shubman Gill | Abhishek Sharma | Suryakumar Yadav | United Arab Emirates | Ind v UAE |