மகளிர் டி20 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் ஆட்டத்தில் இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்நிலையில் 3-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையுடன் துபாயில் விளையாடியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
மந்தனா- ஷெஃபாலி வெர்மா ஆகியோர் நிதானமாக தொடங்கினர். முதல் 5 ஓவர்களில் இந்திய அணி 30 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் பிறகு இருவரும் அதிரடியாக விளையாடி ஓவருக்கு சராசரியாக 10 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர்.
10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் எடுத்தது இந்திய அணி. அதிரடியாக விளையாடிய மந்தனா அரைசதம் அடித்தார். 98 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி எதிர்பாராத ரன் அவுட்டால் பிரிந்தது. மந்தனா ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்தப் பந்திலேயே ஷெஃபாலி வெர்மா 4 பவுண்டரிகளுடன் 40 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதன் பிறகு கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 27 பந்துகள் மட்டுமே எதிர்கொண்டு 52 ரன்களை சேர்த்து, இந்திய அணி 170 ரன்களை கடக்க உதவினார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.
இதன் பிறகு விளையாடிய இலங்கை அணிக்கு ஆரம்பம் முதல் நெருக்கடி அளிக்கப்பட்டது. விஷ்மி குணரத்ன ரன் எதுவும் எடுக்காமலும், சமாரி அத்தபத்து 1 ரன்னிலும், ஹர்ஷிதா சமரவிக்ரமா 3 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற இலங்கை அணி 6 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரேணுகா சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கவிஷா தில்ஹாரி - அனுஷ்கா சஞ்சீவனி ஆகியோர் கூட்டணி அமைத்து 37 ரன்களை சேர்த்தனர். இதன் பிறகு அனுஷ்கா சஞ்சீவனி 22 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் கவிஷாவும் 21 ரன்களில் வெளியேறினார். இந்த 2 விக்கெட்டுகளையும் அருந்ததி ரெட்டி வீழ்த்தினார்.
முடிவில், ஆஷா ஷோபனாவின் அடுத்தடுத்த ஓவர்களில் சுகந்திகா குமாரி மற்றும் பிரியதர்ஷினி ஆகியோரும் ஆட்டமிழக்க, இலங்கை அணி 90 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அருந்ததி ரெட்டி, ஆஷா ஷோபனா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்து கொண்டது இந்திய அணி.
இந்த வெற்றியின் மூலம் ரன் ரேட்டில் இந்திய அணி பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளியது. 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.