
இலங்கைக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் இந்தியா டிஎல்எஸ் விதிப்படி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை, இந்தியா இடையிலான 2-வது டி20 ஆட்டம் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மழையால் இரவு 7 மணிக்குத் தொடங்க வேண்டிய ஆட்டம், இரவு 7.45-க்கு தொடங்கியது. இந்திய அணியில் ஷுப்மன் கில்லுக்குப் பதில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டார்.
முதலிரு ஓவர்களில் அதிரடியாக விளையாடி 18 ரன்கள் எடுத்தது இலங்கை. அடுத்த இரு ஓவர்களில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். குசால் மெண்டிஸ் 10 ரன்களுக்கு அர்ஷ்தீப் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய குசால் பெரேரா முதல் பந்திலிருந்து அதிரடி காட்ட, ஆட்டம் மீண்டும் இலங்கை பக்கம் திரும்பியது. 6 ஓவர்களில் அந்த அணி 54 ரன்கள் எடுத்தது. 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த நிசங்கா 10-வது ஓவரில் ரவி பிஷ்னாய் சுழலில் ஆட்டமிழந்தார்.
ஹார்திக் பந்தில் சிக்ஸர் அடித்த குசால் பெரேரா 31-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்த இலங்கை, கடைசி கட்ட அதிரடிக்குத் தயாரானது.
16-வது ஓவரை வீசிய ஹார்திக் பாண்டியா, முதல் பந்திலேயே காமிந்து மெண்டிஸ் விக்கெட்டை வீழ்த்தி கூட்டணியைப் பிரித்தார். கடைசிப் பந்தில் குசால் பெரேரா (53) விக்கெட்டை வீழ்த்தினார். 17-வது ஓவரில் ரவி பிஷ்னாய் அடுத்தடுத்த பந்துகளில் ஷானகா மற்றும் ஹசரங்காவை டக் அவுட் செய்தார்.
ரமேஷ் மெண்டிஸ் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்து ஆறுதல் அளித்தார். 20 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் வெறும் இரு சிக்ஸர்களை மட்டுமே இலங்கை அணியால் அடிக்க முடிந்தது.
162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய தொடக்க பேட்டர்களாக ஜெயிஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினார்கள். ஷானகா வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் ஜெயிஸ்வால் பவுண்டரி அடித்தார். அப்போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் தடைபட்டது.
தடையால், ஆட்டம் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்திய அணிக்கு 78 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இடைவெளிக்குப் பிறகு தொடங்கிய முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஜெயிஸ்வால் முனைப்பு காட்டினார். 2-வது ஓவரில் தீக்ஷனா பந்துவீச வந்தார். முதல் பந்திலேயே சஞ்சு சாம்சனை போல்ட் செய்து டக் அவுட் செய்தார். இந்த ஓவரில் இந்திய அணியால் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், ஆட்டம் விறுவிறுப்பானது.
ஆனால் ஜெயிஸ்வாலும், சூர்யாவும் அதிரடி காட்டினார்கள். ஹசரங்கா ஓவரில் ஜெயிஸ்வால் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடிக்க, சூர்யாவும் ஒரு பவுண்டரி அடித்தார். தீக்ஷனாவின் இரண்டாவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார் சூர்யா. பதிரனாவை சிக்ஸர் அடித்து வரவேற்ற சூர்யா, அடுத்த பந்திலேயே 26 (12) ஆட்டமிழந்தார்.
கடைசி 3 ஓவர்களில் 24 ரன்கள் தேவைப்பட, மீண்டும் பந்துவீச வந்தார் ஹசரங்கா. இந்த ஓவரில் சிக்ஸர் அடித்த ஜெயிஸ்வால் அடுத்த பந்திலேயே 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால், ஹார்திக் பாண்டியா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடிக்க, இந்தியாவுக்கு இந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள் கிடைத்தன. அடுத்த ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் இரு பவுண்டரிகள் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார் ஹார்திக் பாண்டியா.
6.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம், டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. சூர்யகுமார் யாதவ், கௌதம் கம்பீர் கூட்டணியில் இந்திய அணி முதல் டி20 தொடரை வென்றுள்ளது.