
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது டி20-யில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3-வது டி20 ஆட்டம் செஞ்சுரியனில் நடைபெற்றது. டாஸ் வென்ற தெ.ஆ. அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் அவேஷ் கானுக்கு பதிலாக ரமண்தீப் சிங் சேர்க்கப்பட்டார்.
கடந்த ஆட்டத்தில் முதல் ஓவரின் 3-வது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறிய சாம்சன், இம்முறை முதல் ஓவரின் 2-வது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இதன் பிறகு அபிஷேக் சர்மா - திலக் வர்மா கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடினார்கள்.
சமீப நாட்களில் அதிகமாக விமர்சிக்கப்பட்ட அபிஷேக் சர்மா, தன்னை நிரூபிக்கும் வகையில் அரைசதம் அடித்தார். 25 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 1, ஹார்திக் பாண்டியா 18, ரிங்கு சிங் 8, ரமண்தீப் சிங் 15 ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினாலும், தனி ஒருவனாக களத்தில் நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார் திலக் வர்மா. தனது முதல் டி20 சதத்தை அடித்து தெ.ஆ. அணியின் பந்துவீச்சாளர்களை திணறடித்தார் திலக்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் திலக் வர்மா 56 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. தெ.ஆ. அணி தரப்பில் கேஷவ் மஹாராஜ் மற்றும் சிமிலானே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து விளையாடிய தெ.ஆ. அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தாலும், பேட்டர்களால் அதிக ரன்களை குவிக்க முடியவில்லை.
ரிக்கல்டன் 15 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அர்ஷ்தீப் சிங் பந்தில் வெளியேற, ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 13 பந்துகளில் 21 ரன்களும், மார்க்ரம் 18 பந்துகளில் 29 ரன்களும் எடுத்து வருண் சக்ரவர்த்தி பந்தில் வெளியேறினர். 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்தது தெ.ஆ. அணி.
இதன் பிறகு கிளாசன் - மில்லர் கூட்டணி அதிரடியாக விளையாடி 58 ரன்கள் சேர்த்தது. மில்லர் 18 ரன்களில் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார்.
கிளாசன் களத்தில் இருந்த வரை தெ.ஆ. அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், அந்த நம்பிக்கையை உடைத்தார் அர்ஷ்தீப் சிங். கிளாசன் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 22 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
19-வது ஓவரில் 26 ரன்களை எடுத்து இந்திய ரசிகர்களை பதறவைத்தார் யான்சென். கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. 2-வது பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸரை அடித்து பயம் காட்டிய யான்சென், அடுத்த பந்தில் வெளியேறினார். 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 17 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து யான்சென் ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் தெ.ஆ. அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இத்தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. கடைசி டி20 வரும் நவ. 15 அன்று நடைபெறுகிறது.