19 வயதுக்குள்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.
19 வயதுக்குள்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் கோலாலம்பூரில் மோதின. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க பேட்டர்கள் தடுமாறினார்கள். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், டி20 பாணியிலான ஆட்டத்தையே தென்னாப்பிரிக்காவால் விளையாட முடிந்தது.
20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய தென்னாப்பிரிக்கா 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய அணியில் கோங்கடி த்ரிஷா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வைஷ்ணவி ஷர்மா, ஆயுஷி ஷுக்லா, பருனிகா சிசோடியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஷப்னம் ஷகில் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
83 ரன்கள் என சுலபமான இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தொடக்க பேட்டர் கமலினி 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும், கோங்கடி த்ரிஷா மற்றும் சானிகா சால்கே இணை விக்கெட்டை இழக்காமல் வெற்றி இலக்கை அடைய உதவினார்கள்.
11.2 ஓவர்களிலேயே இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த த்ரிஷா 33 பந்துகளில் 44 ரன்களும், சால்கே 22 பந்துகளில் 26 ரன்களும் எடுத்தார்கள்.
ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதுகளை த்ரிஷா வென்றார். இந்தத் தொடரில் அவர் 309 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் த்ரிஷா முதலிடத்தில் உள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த கமலினி 143 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இதன்மூலம் 19 வயதுக்குள்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.
இறுதிச் சுற்றுகளில் தோல்வியடையும் தென்னாப்பிரிக்கா
மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 - இறுதிச் சுற்றில் தோல்வி
ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024 - இறுதிச் சுற்றில் தோல்வி
மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 - இறுதிச் சுற்றில் தோல்வி
யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை 2025 - இறுதிச் சுற்றில் தோல்வி