
பிரதமர் XI அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
பிஜிடி தொடரின் முதல் டெஸ்டில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
டிச. 6 அன்று தொடங்கும் 2-வது டெஸ்ட் அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இந்த டெஸ்டுக்கு முன்பு பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயற்சி ஆட்டம் கான்பெராவில் நேற்று தொடங்கியது.
முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரு நாள்கள் கொண்ட இந்த பயிற்சி ஆட்டத்தின் 2-வது நாளில் 50 ஓவர்கள் ஆட்டமாக விளையாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இன்றும் மழையின் தாக்கம் இருந்ததால் ஆட்டம் 46 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த பிரதமர் XI அணியில், 19 வயதே ஆன சாம் கான்ஸ்டஸ் 97 பந்துகளில் 107 ரன்கள் அடித்து அசத்தினார். இறுதியில் ஜேகப்ஸ் 61 ரன்கள் எடுக்க பிரதமர் XI அணி 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய அணி தரப்பில் அசத்தலாக பந்துவீசிய ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன் பிறகு விளையாடிய இந்திய அணியில் ஷுப்மன் கில் அரைசதம் அடித்து அசத்தினார். முதல் டெஸ்டில் விளையாடாத கில், இந்த ஆட்டத்தில் தன்னை நிரூபித்துள்ளார். இதனால் 2-வது டெஸ்டில் அவர் பங்கேற்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஜெயிஸ்வால் 45 ரன்களும், நிதிஷ் ரெட்டி 42 ரன்களும் எடுக்க கேப்டன் ரோஹித் சர்மா 3 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
இறுதியில் ஜடேஜா 42 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 42 ரன்களும் எடுக்க இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது.