
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியின் குரூப் சுற்றில் எல்லா ஆட்டங்களையும் வென்றுள்ளது இந்திய அணி. வருண் சக்ரவர்த்தி உண்டாக்கிய புதிய குழப்பத்தால் ஒரு முக்கியக் கேள்வியுடன் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவிருக்கிறது.
துபாயில் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசி. கேப்டன் மிட்செல் சான்ட்னர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஹர்ஷித் ராணாவுக்குப் பதிலாக வருண் சக்ரவர்த்தி இடம்பெற்றார். ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 13-வது முறையாக டாஸில் தோற்றது இந்தியா. 2023 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் டாஸில் தோற்கத் தொடங்கிய இந்தியா, இன்றுவரை விளையாடிய 13 ஒருநாள் ஆட்டங்களிலும் டாஸில் தோற்றுள்ளது.
இந்திய அணிக்கு எதிர்பாராதவிதமாக நல்ல தொடக்கம் அமையவில்லை. 7 ஓவர்களுக்குள் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலியின் விக்கெட்டுகளை இழந்தது. பிலிப்ஸின் மகத்தான கேட்சால் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் கோலி. இது அவருடைய 300-வது ஒருநாள் ஆட்டம். 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷ்ரேயஸ் ஐயரும் அக்ஷர் படேலும் 29-வது ஓவர் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டார்கள். 43 ரன்கள் எடுத்த அக்ஷர், ரச்சின் ரவீந்திரா பந்தில் ஆட்டமிழந்தார். நன்கு விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர், 98 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி 10 ஓவர்களில் பாண்டியா ரன்கள் சேர்க்க உதவினார். 45 ரன்கள் எடுத்துக் கடைசி ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 249 ரன்கள் எடுத்தது. மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நியூசி. இன்னிங்ஸில் ரச்சின் ரவீந்திராவை 6 ரன்களுக்கு பாண்டியா வீழ்த்தினார். வில் யங் நன்கு விளையாடி 22 ரன்கள் எடுத்தபோது வருண் சக்ரவர்த்தியின் பந்தில் போல்ட் ஆனார். வில்லியம்சனும் டேரில் மிட்செல்லும் ஓரளவு தாக்குப்பிடித்தார்கள். டேரில் மிட்செல், 17 ரன்களுக்கு குல்தீப் பந்தில் ஆட்டமிழந்த பிறகு நியூசிலாந்தின் நடுவரிசை பேட்டர்களால் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களைத் தாக்குப்பிடிக்க முடியாமல் போனது. முக்கியமாக, வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சை எதிர்கொள்ளத் திணறினார்கள். வில்லியம்சன் சற்று நிதானமாக ஆடி 81 ரன்கள் எடுத்து அக்ஷர் பந்தில் ஸ்டம்பிங் ஆனார். கடைசியில் 45.3 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோற்றது நியூசிலாந்து. வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார். இதனால் அரையிறுதியில் வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகிய இருவரில் யாரைத் தேர்வு செய்வது என்கிற குழப்பம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.
செவ்வாயன்று நடைபெறவுள்ள முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது இந்திய அணி. புதன் அன்று நடைபெறவுள்ள 2-வது அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.