
சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச் சுற்றில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, 12 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச் சுற்றில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் துபாயில் இன்று மோதின. ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 12-வது முறையாக டாஸில் தோற்றார் ரோஹித் சர்மா. நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். மேட் ஹென்றி காயம் காரணமாக விலகினார். நேதன் ஸ்மித் சேர்க்கப்பட்டார்.
நியூசிலாந்து தொடக்க பேட்டர்களாக வில் யங், ரச்சின் ரவீந்திரா களமிறங்கினார். முஹமது ஷமி, ஹார்திக் பாண்டியா வீசிய முதல் மூன்று ஓவர்களில் ஆட்டத்தில் அமைதி நிலவியது.
ஹார்திக் பாண்டியா வீசிய நான்காவது ஓவரில் ரவீந்திரா ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகள் விளாசி அதிரடியைத் தொடர்ந்தார். முஹமது ஷமியின் அடுத்த ஓவரில் இரு பவுண்டரிகள். 5 ஓவர்களில் 37 ரன்களுக்கு விரைந்தது நியூசிலாந்து.
உடனடியாக பாண்டியாவை நிறுத்திவிட்டு வருண் சக்ரவர்த்தியை அழைத்து வந்தார் ரோஹித் சர்மா. தனது இரண்டாவது ஓவரிலேயே வில் யங் விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனை உண்டாக்கினார் வருண் சக்ரவர்த்தி. 10 ஓவர்களில் 69 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து.
11-வது ஓவரில் குல்தீப் யாதவ் அழைத்து வரப்பட்டார். இவர் தனது முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திராவை போல்ட் செய்தார். ரச்சின் ரவீந்திரா 29 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். குல்தீப் யாதவ் தனது அடுத்த ஓவரில் கேன் வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்தி நியூசிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அடுத்த 10 ஓவரில் வெறும் 32 ரன்கள் மட்டுமே நியூசிலாந்து எடுத்தது. 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்தது. டாம் லேதம், டேரில் மிட்செல் கூட்டணி அச்சுறுத்தலாக மாறத் தொடங்கிய நேரத்தில் லேதம் விக்கெட்டை வீழ்த்தி ஜடேஜா அசத்தினார். 108 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்ததால், மிட்செல் மற்றும் கிளென் ஃபிளிப்ஸ் இணை கூட்டணியைக் கட்டமைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
டேரில் மிட்செல் ஆமை வேகத்தில் விளையாட, ஃபிளிப்ஸ் அவ்வப்போது சிக்ஸர், பவுண்டரி அடித்து விளையாடி ரன் சேர்த்தார். 30 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து. மிட்செல், ஃபிளிப்ஸ் இணை 5-வது விக்கெட்டுக்கு 50 ரன்களை கடந்து கடைசி கட்ட அதிரடிக்குத் தயாராகிக் கொண்டிருந்தது.
இதை உணர்ந்த ரோஹித் சர்மா, வருண் சக்ரவர்த்தியைக் கொண்டு வந்தார். ஃபிளிப்ஸ் 34 ரன்களுக்கு போல்டானார். 40 ஓவர்களில் நியூசிலாந்து 172 ரன்கள் எடுத்தது.
நம்பிக்கையான கடைசி பேட்டர்கள் என்பதால் டேரில் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் 40 ஓவரை தாண்டினாலும் வேகப்பந்துவீச்சாளர்கள் வரும் வரை காத்திருந்தார். மிட்செல் 91 பந்துகளில் அரைசதம் அடித்தார். குல்தீப் யாதவ் வீசிய 43-வது ஓவரில் பிரேஸ்வெல் பவுண்டரி அடித்தார். 65 பந்துகளில் அடிக்கப்பட்ட முதல் பவுண்டரி இது.
நியூசிலாந்து எதிர்பார்த்த ரன்கள் வேகப்பந்துவீச்சில் கிடைத்தது. ஷமியின் கடைசி ஸ்பெல் முதல் ஓவரில் ஒரு சிக்ஸர், இரண்டாவது ஓவரில் இரு பவுண்டரிகள் என நொறுக்கினார் மிட்செல். அதேசமயம் 63 ரன்களுக்கு ஷமி பந்திலேயே மிட்செல் ஆட்டமிழக்கவும் செய்தார்.
கடைசி 3 ஓவர்களை அதிரடியுடன் நிறைவு செய்ய வேண்டிய பொறுப்பை மைக்கேல் பிரேஸ்வெல் ஏற்றுக்கொண்டார். ஷமியின் 48-வது ஓவரில் ஒரு பவுண்டரி, 49-வது ஓவரில் ஒரு சிக்ஸர், கடைசி ஓவரில் மீண்டும் ஒரு பவுண்டரி என விளாசினார். பிரேஸ்வெலின் அதிரடியால் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிரேஸ்வெல் 40 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். கடைசி 10 ஓவர்களில் நியூசிலாந்து 79 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
252 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் களமிறங்கினார்கள். ரோஹித் சர்மா வழக்கம்போல இரண்டாவது பந்தையே சிக்ஸர் அடித்து அதகளப்படுத்தினார். அடுத்து வில் ஓ ரூர்க் பந்தில் இரு பவுண்டரிகள் அடித்தார். கேப்டனின் அதிரடியைப் பார்த்துக்கொண்டு நிதானமாக விளையாடினார் துணை கேப்டன் ஷுப்மன் கில். 10 ஓவர்களில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 41 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
மிட்செல் சான்ட்னர் மற்றும் ரச்சின் ரவீந்திரா சுழற்பந்துவீச்சு மூலம் ஆட்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தியது. எனினும் 17 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட்டை இழக்காமல் 100 ரன்களை எட்டியது. 18 ஓவர்கள் முடிந்தவுடன் இடைவெளி எடுக்கப்பட்டது.
இந்த இடைவெளிக்குப் பிறகு, சான்ட்னர் வீசிய ஓவரில் ஃபிளிப்ஸின் அட்டகாசமான கேட்சில் ஷுப்மன் கில் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே பிரேஸ்வெலின் முதல் பந்தில் கோலி ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் 108 ரன்கள் எடுத்த இந்தியா 2 விக்கெட்டை இழந்திருந்தது.
அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை இழந்ததால், கூட்டணியைக் கட்டமைக்க முயற்சித்து ரோஹித் சர்மா ஆட்டத்தின் வேகத்தைக் குறைத்துக் கொண்டார். 5 ஓவர்களுக்கு பவுண்டரி இல்லாததால், ரோஹித் இறங்கி வந்து விளையாடப் பார்த்து ரச்சின் ரவீந்திரா பந்தில் 76 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் அக்ஷர் படேல் கூட்டணி அமைத்தார்கள். ஷ்ரேயஸ் ஐயர் சுழற்பந்துவீச்சை அவ்வப்போது சிக்ஸருக்கு அனுப்பி நெருக்கடி கொடுத்தார். இவருடைய கேட்ச் வாய்ப்பையும் நியூசிலாந்து தவறவிட்டது. இவர் 48 ரன்கள் எடுத்திருந்தபோது, சான்ட்னர் சுழலில் வீழ்ந்தார்.
இவர் ஆட்டமிழந்த ஓவரிலேயே அக்ஷர் படேல் ஒரு சிக்ஸர் அடித்து நெருக்கடியைத் தணித்தார். ஆதிக்கம் செலுத்தி வந்த சான்ட்னர் சுழலில் கேஎல் ராகுல் ஒரு சிக்ஸர் அடிக்க ஆட்டம் இந்தியா பக்கம் வந்தது. இந்த நேரத்தில் தவறான ஷாட்டை விளையாடி அக்ஷர் படேல் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, கேஎல் ராகுல் மற்றும் ஹார்திக் பாண்டியா மிக வேகமாக விளையாடி பவுண்டரிகளாக அடித்தார்கள். ரச்சின் ரவீந்திரா பந்தில் இமாலய சிக்ஸர் அடித்து பாண்டியா அதகளப்படுத்தினார். இந்தியாவின் வெற்றிக்கு 15 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்டபோது, பாண்டியா ஆட்டமிழந்தார்.
எனினும், ராகுல் மற்றும் ஜடேஜா இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்கள். 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.
2002, 2013-க்கு பிறகு சாம்பியன்ஸ் கோப்பையை மூன்றாவது முறையாக வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. எம்எஸ் தோனிக்குப் பிறகு, ஒன்றுக்கும் மேற்பட்ட ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.